பன்னிரண்டாவது ஐபிஎல் தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வர இருக்கின்றன. தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் புள்ளி பட்டியல் முதல் நான்கு இடங்களில் உள்நுழைய கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே முதல் 4 இடங்களுக்குள் நுழைந்து தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த அணி விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 வெற்றிகளுடன் இரண்டாமிடம் வகிக்கிறது. இதற்கடுத்து முறையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முறையே 12 மற்றும் 10 புள்ளிகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நடப்பு தொடரில் சிறப்பான தொடக்கத்தை கண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர் தோல்விகளால் சற்று கலக்கம் அடைந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் வைக்கிறது.
இந்த வருடம் ஐசிசி உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளதால், ஐபிஎல் தொடர் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, இந்த தொடரின் முடிவுக்கு முன்பே சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப உள்ளனர். ஏற்கனவே, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த தொடர் முடியும் முன்பே தங்களது நாட்டு அணியில் இடம் பெற உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு வீரர்களை மட்டுமே இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட உள்ளனர். வரும் 26ம் தேதிக்குள் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் தங்களது நாட்டிற்கு திரும்ப அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதுபோலவே, ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்த மாதம் இரண்டாம் தேதிக்குள் தங்களது நாட்டிற்கு வந்தடைய வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இன்னும், தென்ஆப்பிரிக்கா அணி மட்டுமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், ப்ளே ஆஃப் தொடங்குவதற்கு முன்பே மேற்கண்ட மூன்று நாட்டு வீரர்களும் தங்களது சொந்த நாட்டு அணியில் இணைய உள்ளனர்.
அவ்வாறு, இந்த தொடர் முடியும் முன்பே கிளம்ப உள்ள வீரர்களின் பட்டியல்,
டெல்லி கேப்பிடல்ஸ் - ககிசோ ரபாடா
சென்னை சூப்பர் கிங்ஸ் - இம்ரான் தாஹீர் மற்றும் பாப் டு பிளிசிஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஜோ டென்லி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டேவிட் மில்லர்
மும்பை இந்தியன்ஸ் - குயின்டன் டி காக் மற்றும் ஜாசன் பெஹன்ராஃப்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மொயின் அலி, மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஸ்டெயின்
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ
மேற்குறிப்பிட்டுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு திரும்ப உள்ளதால், இந்த வீரர்கள் இடம் பெற்ற ஐபிஎல் அணிகளுக்கு பெரும் நெருக்கடி உள்ளாகியுள்ளது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளில் தலா ஒரு வீரர் மட்டுமே கிளம்புவதால் பெரிய அளவில் தாக்கம் இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் வெளியேற உள்ளதால் இந்த அணிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும்.