சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. சென்னை அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை அணி 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.
மிகவும் பொறுமையாக ஆட்டத்தை தொடங்கியது பெங்களூரு அணி. ஹர்பஜன் சிங் தன் சுழலில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இவரது விக்கெட்டிற்கு பிறகு எந்த வீரர்களும் நிலைத்து விளையாடவில்லை. இதனால் 70 ரன்களில் பெங்களூரு அணியை சுருட்டியது சென்னை அணி. பின்னர் மிகவும் பொறுமையாக சேஸிங் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய போது ஷேன் வாட்சன், யுஜ்வேந்திர சகாலின் சுழலில் போல்ட் ஆனார். அம்பாத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா சிறது பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் கேதார் ஜாதவ் மற்றும் ஜடேஜா ஆட்டத்தை முடித்து வைத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமான 4 வீரர்களை பற்றி காண்போம்.
#1 ஹர்பஜன் சிங்
அனுபவ பௌலர் ஹர்பஜன் சிங் தனது சிறப்பான ஆட்டத்தை பெங்களூரு அணிக்கு எதிராக வெளிபடுத்தினார். பெங்களூரு அணியின் தூண்களான ஏபி. டிவில்லியர்ஸ், விராட் கோலி, மொய்ன் அலி ஆகியோரது விக்கெட்டுகளை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சில் இவர் மட்டுமே சிறிது பவுண்ஸ் உடன் சேர்த்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்
இவரது முதல் விக்கெட்டான விராட் கோலி நேராக மெதுவாக வந்த பந்தை இடப்பக்கமாக பேட் கொண்டு சுழற்ற அந்த திசையில் இருந்த ஜடேஜாவினால் கேட்ச் பிடிக்கப் பட்டது.இரண்டாவது விக்கெட் மிகவும் மெதுவாக வீசப்பட்ட பந்தை நேராக தட்டி விட்டார் மொய்ன அலி. அது பந்து வீசிய ஹர்பஜன் சிங்-கிடமே சென்றது.
ஹர்பஜன் சிங்கால் ஷாட் பாலாக வீசப்பட்ட பந்தை பெரிய ஷாட் அடிக்க முயன்ற ஏபி. டிவில்லியர்ஸ். ஆனால் பவுண்டரி லைனில் இருந்த ஃபில்டரால் கேட்ச் பிடிக்கப் பட்டார்.
#2 இம்ரான் தாஹீர்
தாஹீர் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். இவர் எடுத்த விக்கெட்டுகள் மூலம் பெங்களூரு அணியை குறைந்த இலக்கில் மடக்க முடிந்தது. ஆரம்பத்தில் ஏபி. டிவில்லியர்ஸ் விக்கெட்டை தவற விட்டாலும் அடுத்த பந்திலேயே அதிக ரன்களை அடிக்க விடாமல் கூடிய விரைவிலே டிவில்லியர்ஸ் விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இவர் பந்துவீச வரும் போது சிவம் துபேவை நேராக வீசி விக்கெட் வீழ்த்தினார். இடது கை பேட்ஸ்மேனான சிவம் தூபே பந்தை நிறுத்த முற்பட்ட போது பேட்டில் பட்டு ஷேன் வாட்சன்-டம் கேட்ச் ஆனார். அத்துடன் யுஜ்வேந்திர சகால், நவ்தீப் சய்னி ஆகியோரது விக்கெட்டுகளையும் சாய்த்தார். தென்னாப்பிரிக்கா அனுபவ சுழற்பந்து வீச்சாளர் 4 ஓவர் வீசி 9 ரன்கள் மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#3 ரவீந்திர ஜடேஜா
இந்தப்போட்டி ஜடேஜாவிற்கும் சிறப்பாகவே அமைந்தது. ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர் ஆகியோருடன் சேர்ந்து ஜடேஜாவும் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசையை சிதைத்தார். ஃபீல்டிங்கில் அருமையாக அசத்தினார். அத்துடன் டிவில்லியர்ஸ் கேட்சை பிடித்தார்.
இவர் இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவின் முதல் விக்கெட் காலின் டி கிரான்ட் ஹாம் மற்றொரு விக்கெட் உமேஷ் யாதவ். இவரது சுழலில் காலின் டி கிரான்ட் ஹாம் , தோனியிடன் கேட்ச் ஆனார். ஜடேஜா சுழலில் உமேஷ் யாதவ் போல்ட் ஆனார். இந்த ஆட்டத்தில் தனது முழு ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனையும் ஜடேஜா வெளிபடுத்தியுள்ளார்.
#4 அம்பாத்தி ராயுடு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 71 என்ற இலக்கை நோக்கி விளையாடும் போது ராயுடு அதிக அழுத்தத்தில் விளையாடினார். சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான இந்த மைதானத்தில் மிகவும் பொறுமையான ஆட்டத்தை கையாண்டார். யுஜ்வேந்திர சகாலின் பந்துவீச்சில் மிகவும் பொறுமையாக விளையாடினார்.
ராயுடு தனது நிலையான அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரு பந்துவீச்சை தடுத்து விளையாடினார். குறிப்பாக சுழற்பந்து வீச்சில் பொறுமையாகவும், வேகப்பந்து வீச்சில் இரு பவுண்டரிகளையும் விளாசினார். இவர் மொத்தமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்களை எடுத்தார்.