12 வது சீசன் ஐபிஎல் தொடரின் 39 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் டோனி தலைமையிலான சென்னை அணியும் மோதவிருக்கின்றன. 9 போட்டிகளில் 7 வெற்றிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு எதிர்மாறாக, 9 போட்டிகளில் இரு வெற்றிகளோடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற கடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. மீண்டும் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டிய முனைப்பில் உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்றைய போட்டியில் நிச்சயம் வென்றால் தான் ப்ளே ஆஃப் வாய்ப்பை பற்றி சற்று நினைத்துப் பார்க்க முடியும் இத்தகைய சிறப்பு மிக்க இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றாக வேண்டிய பட்சத்தில் வெற்றியை தீர்மானிக்க கூடிய மூன்று காரணங்களை இங்கு தொகுத்துள்ளேன்.
#1.வெற்றிப் பாதைக்கு திரும்பியதன் மூலம் கிடைத்த உற்சாகம்:
நேற்றுமுன்தினம் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் விராத் கோலி தனது 5வது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், ஆல்ரவுண்டர் மொயின் அலி அபாரமாக விளையாடி ஆட்டத்தின் இறுதி ஓவரையும் வீசி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். மேலும், பந்துவீச்சு தரப்பில் டேல் ஸ்டெயின் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பக்கபலமாகவும். உள்ளூர் வேகப்பந்து வீச்சாளரான சைனி அபாரமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து வருகிறார். தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை வென்றதன் மூலம் புதிய உற்சாகத்துடன் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது, பெங்களூர் அணி.
#2.அபாரமான பவுலிங் கூட்டணி:
இந்த ஐபிஎல் தொடரின் முதல் 8 ஆட்டங்களின் பவர் பிளே ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே பெங்களூரு பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினார்கள். ஆனால், இந்த சோதனையை மாற்றும் வகையில் கடந்த ஆட்டத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பெங்களூர் அணியில் இணைந்த வேகப்புயல் டேல் ஸ்டெயின் தனது முதல் இரு ஓவர்களில் கிறிஸ் லின் மற்றும் சப்மான் கில் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தி பவர் பிளே விக்கெட் தாக்கத்தை தீர்த்தார். கடந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா பேட்ஸ்மேன்களான நிதீஷ் ராணா மற்றும் ஆந்திரே ரசல் ஆகியோரது விக்கெட்களை மட்டும் எவராலும் கைப்பற்ற முடியவில்லை. ஸ்டேயினின் வருகைக்குப் பின்னர், புதிய தெம்பை கண்டுள்ள பெங்களூரு வேகப்பந்து கூட்டணி சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் தங்களது கூடுதல் உழைப்பை போடும் என எதிர்பார்க்கலாம்.
#3.விராட் கோலி ஒரு முக்கியக் காரணி:
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்த தெம்புடன் இன்றைய போட்டியில் களம் காண உள்ளார், பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி. இன்னும் பெங்களூர் அணிக்கு எஞ்சியுள்ள 5 போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால், கூடுதல் கவனத்துடன் விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமின்றி அணியை வழி நடத்துவதிலும் நன்றாக செயல்பட வேண்டும். இது இன்றைய ஆட்டம் முதல் கண்டிப்பாக இருந்தால் தான் நிச்சயம் வெற்றிகளை குவிக்க முடியும்.