நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பெரும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் ஆயத்தமாகி வருகின்றன. புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஏறத்தாழ முதல் 4 இடங்களுக்குள் தங்களை உறுதி செய்து விட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு எஞ்சிய ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. இதுவரை நடைபெற்ற 11 லீக் ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று ஏழில் தோல்வியுற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் ஏழாமிடத்தில் உள்ளது. இன்னும் மூன்று ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றை பற்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நினைத்துப் பார்க்க முடியும். அப்படி இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் தான் பிளே ஆப் சுற்று இந்த அணிக்கு தீர்மானிக்கப்படும்.
அணியில் இடம் பெற்றுள்ள பேட்ஸ்மேன்களான பார்த்தீவ் பட்டேல், விராத் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகின்றனர். ஆனால். அணிக்கு மிகப்பெரிய கவலை அளிப்பது பவுலிங் தான். எனவே, ஒரு தீர்க்கமான மாற்றத்தை பவுலிங்கில் கொண்டு வந்தால் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இனிவரும் ஆட்டங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பேரில், உமேஷ் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இவருக்கு பதிலாக குல்வந்த் அணியில் இணைக்கப்பட வேண்டும். கடைசியாக நடைபெற்ற 6 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள உமேஷ் யாதவ் ரன்களை வாரி வழங்கி வருகின்றார்.
எடுத்துக்காட்டாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு விக்கெட்களை கைப்பற்றி 47 ரன்கள் அள்ளிக் கொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு ஓவர்களை மட்டுமே பந்துவீசிய இவர் 25 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் 42 ரன்களையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 40 ரன்களையும் ஐதராபாத் அணிக்கு எதிராக 47 ரன்களையும் விட்டு கொடுத்து இருந்தார். இதுமட்டுமல்லாது, கடைசியாக குறிப்பிட்ட மூன்று அணிகளுக்கு எதிராக ஒரு விக்கெட்களை கூட இவர் கைப்பற்றவில்லை.
எனவே, இனிவரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இவர் போன்ற பந்துவீச்சாளர் ஆடும் லெவனில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இவருக்கு மாற்றாக இடம்பெறும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான குல்வந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் அரியானா அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பெங்களூரு அணிக்காக கடந்த சீசனில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
இனிவரும் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன் :
விராட் கோலி (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், கிராண்ட்ஹோம், அக்ஸ்தீப் நாத், வாஷிங்டன் சுந்தர், குல்வந்த், சாஹல், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெயின்.