பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறப்போகும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்ள உள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. ஆட்ட முடிவில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறப்போகும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்றில் அடியெடுத்து வைக்கும் முதல் அணி என்ற பெருமையைப் பெறும். ஆகவே, இன்றைய ஆட்டத்தில் அரங்கேறவுள்ள மூன்று விஷயங்களை பற்றிய இந்த தொகுப்பில் காணலாம்.
#1.சாம் பில்லிங்ஸிற்கு பதிலாக தோனி :
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதுகுவலி காரணமாக அவதிப்பட்ட தோனிக்கு ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் தோனி இல்லாமல் சென்னை அணி நான்காவது முறையாக களமிறங்கியது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் இடம் பெற்றார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுரேஷ் ரெய்னா வழிநடத்தினார். கனே வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடம் ரெய்னா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் சாம் பில்லிங்ஸ் ரன்கள் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மேலும், அந்த ஆட்டத்தில் சென்னை கேப்டனான சுரேஷ் ரெய்னா பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி நிச்சயம் களமிறங்குவார் என நம்பிக்கை தெரிவித்தார். அதன்படி, இன்று தோனி நிச்சயம் களமிறங்கினால் சென்னை அணி வெற்றியை குவித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
#2.கரண் சர்மாவுக்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் / ஸ்காட் குக்லெய்ஜ்ன்:
ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தான் முதன்முறையாக இந்த தொடரில் களமிறங்கினார், லெக் ஸ்பின்னர் கரண் ஷர்மா. 2013ம் ஆண்டு முதல் 2016 வரை ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கரண் சர்மா ஆடுகள தன்மையை நன்கு அறிந்து இருப்பார் என்ற காரணத்தால் அணியில் இடம்பெற்றார். இதனால், சேன்ட்னர் இந்த போட்டியில் விளையாடவில்லை. கரண் சர்மா வீசிய 2.5 ஓவர்களில் 34 ரன்களை அள்ளிக் கொடுத்தார். இதனால் நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் இவருக்கு பதிலாக சான்ட்னர் / ஸ்காட் குக்லெய்ஜ்ன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் இடம்பெறுவர்.
#3.ஹென்ரிச் கிளாசனுக்கு பதிலாக டிவில்லியர்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவிலியர்ஸ்-க்கு பதிலாக ஹென்ரிச் கிளாசன் களமிறங்கினார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹெல்மெட்டில் அடிபட்டதால் சற்று நிலைகுலைந்த டிவில்லியர்ஸ் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதனை உரைக்கும் வகையில், டிவில்லியர்ஸ் நிலைமை தற்போது நன்றாக இல்லை என கூறியுள்ளார், விராட் கோலி. இதனால், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பெங்களூர் அணியில் டிவில்லியர்ஸ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.