நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணியினருக்கும் இன்னும் நான்கு அல்லது மூன்று லீக் ஆட்டங்களில் உள்ளது. ஒவ்வொரு அணியிலும் தலா 4 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடுவர் அதற்கேற்றார்போல தக்க வியூகங்களும் திட்டங்களும் ஒவ்வொரு அணியிலும் தீட்டப்படும். 2019 உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஐபிஎல்லில் விளையாடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது நாட்டுக்கு திரும்ப உள்ளனர். குறிப்பாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த தொடர் முடியும் முன்பே தங்களது தாயகத்திற்கு புறப்பட உள்ளனர். அவ்வாறு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ நேற்றைய ஆட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்து செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார்.
இதுபோலவே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திற்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள மொயின் அலி மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோரும் தங்களது நாட்டிற்குச் செல்ல உள்ளனர். இது பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஏனெனில், இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயின் அலி பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 216 ரன்களை 168.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். விராட் கோலி மற்றும் டிவிலியர்ஸ் அணியில் சோபிக்க தவறினாலும், மொயின் அலி தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதேபோலத்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டோனிஸ் தனது நாட்டிற்கு திரும்ப உள்ளார்.
இவர்களின் இடத்திற்கு ஈடுகட்டும் வகையில் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களான சிம்ரொன் ஹெட்மெய்ர், காலின் கிராண்ட்ஹோம் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான போட்டிகளில் கிராண்ட் ஹோம் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் இருவர் நிச்சயம் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், இவர்கள் இருவரும் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்தவர்கள். உலக கோப்பை முன்னேற்பாடுகளால் மேற்குறிப்பிட்ட மூன்று அணிகள் தங்களது நாட்டு வீரர்களை திரும்பப் பெற உள்ள நிலையில். இந்த நியூசிலாந்து அணி அவ்வாறு தங்களது வீரர்களை திரும்ப அழைக்கவில்லை.
இதே நிலைதான் மற்ற ஏழு அணிகளுக்கும் தொடர்கிறது மீதமுள்ள ஒவ்வொரு அணியும் தங்கள் வெளிநாட்டு வீரர்களை இழந்து மாற்று வீரர்களை களம் இறக்கும் சூழ்நிலை உருவாகும். மேலும், இந்த இரு வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக இந்திய இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோரும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வாஷிங்டன் சுந்தர் நடப்பு தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இன்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு விலக உள்ள இரு வீரர்களை ஒரு பொருட்டாக கருத்தில் கொள்ளாமல், இந்த அணி விளையாடும் என எதிர்பார்க்கலாம் ஒருவேளை மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது.