ஐபிஎல் இன் 12வது சீசன் வருகிற மார்ச் மாதம் 23ம் தேதி அன்று சென்னையில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள உள்ளது. கடந்த சீசனின் இறுதி போட்டி வரை சென்று தோல்வியுற்ற ஹைதெராபாத் அணி, ஐபிஎல் இல் குறைவாக மதிக்கப்பட்ட ஒரு அணி. கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் இந்த அணி, 2016 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. 2017ல் பிலே ஆப் சென்ற இந்த அணி, 2018ல் இறுதி போட்டியில் சென்னையிடம் தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கை விட பந்துவீச்சில் சிறப்பாக இருக்கும் இந்த அணியில், 3 சிறப்பான பேட்ஸ்மேன்கள் பற்றிய ஒரு தொகுப்பில் கீழே காணலாம்.
#3 மனிஷ் பாண்டே
வலது கை இந்திய பேட்ஸ்மேனான இவர், சிறு வயதில் இருந்தே சிறந்த பேட்ஸ்மேனாக வளர்த்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 2009ம் ஆண்டு இவர் அடித்த சதம் யாராலும் மறக்க முடியாது. 18 வயதில் இந்த சாதனையை படைத்த பாண்டே, அன்றைய தேதியில் சதம் அடித்த ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 73 பந்துகளில் 114 ரன்கள் அடித்த பாண்டே, அந்த இன்னிங்சில் 10 பௌண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் சென்ற ஆண்டின் ஏலத்தில் ஹைதெராபாத் அணியால் 11 கோடிக்கு வாங்கப்பட்டார். சொல்லிக்கொள்ளும் படி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய பாண்டே, இம்முறை அதை தகர்த்து எறிவார் என எதிர்பார்க்கலாம்.
29 வயதான இவர், இதுவரை 118 ஐபிஎல் போட்டிகளில் 2499 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 28.08 ரன்னும் அதிகபட்சமாக 114 ரன்களும் எடுத்துள்ளார். இதில் 12 அரை சதமும், 1 சதமும் அடங்கும். இவரது ஸ்ட்ரைக் ரேட் 119.57.
#2 கேன் வில்லியம்சன்
நியூஸிலாந்து அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரரான இவர், உலகின் தற்போதைய முன்னனி ஆட்டக்காரர்களுள் ஒருவர். சென்ற ஆண்டு டேவிட் வார்னர் விளையாடாததால், ஹைதெராபாத் அணியை வழிநடத்தி இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். சென்ற சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பட்டத்தையும் வென்றார். 2018ம் ஆண்டு 17 போட்டிகளில் பங்கேற்று 735 ரன்கள் குவித்தார். சராசரியாக 52.50 ரன்னும், ஸ்ட்ரைக் ரேட்டாக 142.44 உம் பதிவு செய்தார். அதிக பட்சமாக 84 ரன்கள் எடுத்தார்.
மொத்தமாக ஐபிஎல் இல் 1146 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 11 அரை சதங்கள் அடங்கும். இம்முறை எவ்வாறு பேட்டிங் செய்ய போகிறார் என்பதை பொறுத்து பார்க்கலாம்.
#1 டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான இவர், அதிரடியாய் ரன்கள் சேர்ப்பதில் வல்லவர். பால் டாம்பேரிங் செய்ததால் ஓராண்டு சர்வதேச ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காத இவர், இம்முறை விளையாட தகுதியாக உள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும் உலகம் முழுவதும் டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பங்களாதேஷ் டி20 தொடரில் வலது கை பபேட்ஸ்மேனாக அசத்தினார்.
32 வயதான இவர் ஐபிஎல் இல் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வளம் வருகிறார். இதுவரை 114 ஐபிஎல் இன்னிங்சில் 4014 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 36 அரை சதமும் 3 சதமும் அடங்கும். அதிகபட்சமாக 126 ரன்கள் எடுத்துள்ள வார்னர், சராசரியாக 40.55 ரன்கள் எடுத்துள்ளார். இவரது வருகை ஹைதெராபாத் அணிக்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.