இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சென்னையில் மார்ச் 23 அன்று தொடங்க உள்ளது. கடந்த சீசனின் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதல் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மற்ற ஆட்டங்களின் பட்டியல் மார்ச் 18 அன்று வெளியிடப்படலாம்.
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் இரண்டு மாதங்கள் நடைபெறவிருக்கும் ஐபிஎல் திருவிழாவிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் பங்குபெறும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவராக அவரவர்கள் அணியில் இணைந்து கொண்டுள்ளனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக கடந்த சில சீசன்களாக திகழ்கிறார் டேவிட் வார்னர். 2016ல் இவரது தலைமையில் கோப்பையும் ஹைதராபாத் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பந்தை சேதப்படுத்திய வழக்கில் கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து டேவிட் வார்னர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய தேசிய அணி மற்றும் உள்ளுர் அணிகளில் விளையாடவும் தடை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த சீசனில் ஹைதராபாத் அணி இவரை ஒரு பேட்ஸ்மேன் மற்றும் அணியின் கேப்டனாக மிஸ் செய்தது. டேவிட் வார்னரின் தடைக்காலம் மார்ச் கடைசி வாரத்தில் முடிவடைய உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் ஐபிஎல் 2019ல் தாங்கள் விளையாட உள்ள அணிகளுக்கு இன்று(மார்ச் 17) திரும்பியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்பியதை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை சற்று உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார். "தனது கடினமான காலங்களில் எனக்கு துனை நின்ற ரசிகர்களுக்கும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் நன்றி. ஆரஞ்சு படைக்கு மீண்டும் திரும்புவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றும் கூறியுள்ளார்.
டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 59 போட்டிகளில் விளையாடி 52.63 சராசரியுடன் 2500 ரன்களை குவித்துள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சதம் விளாசிய ஒரே வீரர் டேவிட் வார்னர். ஹைதராபாத் அணிக்காக தனிநபர் ஒருவர் அதிக ரன்கள் 7 முறை குவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 முறை அதிக ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார் டேவிட் வார்னர். இவரது கிரிக்கெட் வாழ்வில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அளித்த பங்கு அதிகமாகும்.
2016 ஐபிஎல் சீசனில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் டேவிட் வார்னர். அந்த சீசனில் இவருக்கு போட்டியாக ரன் குவித்து வந்தவர் விராட் கோலி. ஆனால் கடைசியாக டேவிட் வார்னர் 848 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2016ல் பயன்படுத்திய தந்திரத்தை பயன்படுத்தி 2019 ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் தலைமையில் ஐபிஎல் கோப்பை வெல்லும் என்பது ரசிகர்களின் கருத்தாகும்.