கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறப்போகும் நடப்பு தொடரின் 42 வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. நடப்பு தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி, மூன்றில் மட்டுமே வெற்றியை கண்டுள்ளது. பெங்களூர் அணிக்கு இனி வரும் போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.
ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடிய 10 லீக் ஆட்டங்களில் ஐந்து வெற்றி பெற்று ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும், புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. இறுதியாக, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றிருந்தது, கிங்ஸ் லெவன் பஞ்சாப். எனவே, பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை தோற்கடித்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு பெங்களூர் அணி மேற்கொள்ளவுள்ள 2 மாற்றங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.பவன் நெகிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர்:
நடப்பு தொடரில் தனது மோசமான பார்மை வெளிப்படுத்தி வருகிறார், ஆல்ரவுண்டர் பவன் நெகி. இதுவரை 6 போட்டிகளில் களமிறங்கிய இவர் பேட்டிங்கில் ஐந்து ரன்களையும் பவுலிங்கில் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். மேலும், இவரது பவுலிங் எகனாமி 9.13 என்ற அளவில் மோசமாக உள்ளது.
பெங்களூர் அணியில் ஆடும் லெவனில் இதுவரை ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் களம் இறக்கப்படாதது சற்று ஆச்சரியமாக உள்ளது. சென்னையை சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே அணியில் இடம் பெற்று 11 போட்டிகளில் விளையாடினார். மேலும், இவர் தனது பவுலிங்கில் 8 விக்கெட்களை 6.16 என்ற பவுலிங் எக்கனாமியோடு வீழ்த்தி இருந்தார். எனவே, இன்றைய ஆட்டத்தில் இவர் நிச்சயமாக ஆடும் லெவனில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இதே பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2.அக்ஷ்தீப் நாத்துக்கு பதிலாக சிவம் துபே:
நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் விராட் கோலியின் நம்பிக்கையைப் பெற்று தொடர்ந்து ஆடும் லெவனில் இணைக்கப்பட்டு வருகிறார், அக்ஷ்தீப் நாத் . ஆனால், கோலி எதிர்பார்த்தபடி இவர் இதுவரை தனது ஆட்டத்திறனை சரியாக நிரூபிக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேனான இவர், விளையாடிய 7 லீக் ஆட்டங்களில் 58 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 116 என்ற வகையில்தான் உள்ளது.
இவருக்கு மாற்றாக மும்பையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் சிவம் துபே ஆடும் லெவனில் இடம்பெறலாம். இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களுக்கு பிறகு கழற்றி விடப்பட்டார், சிவம் துபே. பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் சிறப்பாக விளங்கும் இவர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் இடம்பெறுவார் என நம்பலாம். ஒருவேளை, இவர் அணியில் இடம் பெற்றால் பெங்களூர் அணிக்கு கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் கிடைப்பார். ஏற்கனவே, அணியில் உள்ள பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இவர் அவர்களுக்கு மாற்றாக அமைவார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தனது ஃபார்மை முழுமையாக வெளிப்படுத்தாத இவர், இன்றைய ஆட்டத்தில் தனது ஆட்டத்திறனை அபாரமாக வெளிப்படுத்தி தொடர்ந்து அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.