நடப்பு ஐபிஎல் தொடரின் அரை பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர்ந்து நான்காவது ஆண்டாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. கடந்த மூன்று சீசன்களில் முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் 7 ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியுற்றது. பின்னர், எழுச்சி கொண்ட இந்த அணி அடுத்து வந்த 7 போட்டிகளில் 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இது மட்டுமின்றி, அந்த தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி இடம் தோல்வியுற்றது.
அதேபோல, இந்த நடப்பு தொடரிலும் தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோல்வியுற்ற விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, அடுத்து வந்த நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது. இதன் மூலம், இந்த அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இன்னும் முடியவில்லை. எனவே, புள்ளிப் பட்டியலில் ரன் ரேட் அடிப்படை இல்லாமல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான மூன்று காரணிகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஒன்று, தொடர்ந்துஎல்லா போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றால், பெங்களூரு அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இரண்டாவது, புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்கள் வகிக்கும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதன் மூலம் பெங்களூர் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கும்.
மூன்று, மற்ற அணிகளின் தோல்வி பெங்களூர் அணியை ரன்ரேட் அடிப்படையின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும்.
எனவே, மேற்குறிப்பிட்டுள்ளதில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் பெங்களூர் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிவிடும். அதேபோல, இந்த காரணிகள் 100% பெங்களூர் அணிக்கு சாதகமாக முடியும் என்றும் கூறிவிட முடியாது. இருப்பினும், இனிவரும் போட்டிகளில் பெங்களூர் அணி தொடர்ந்து வெற்றி பெற்று 2016ம் ஆண்டு போல் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.