கடந்த பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார், விராத் கோலி. இது டெஸ்ட் போட்டியானாலும் சரி ஐபிஎல் போட்டியானாலும் சரி இவரின் பங்களிப்பு அனைத்திலும் உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள விராட் கோலி, நடப்பு ஐபிஎல் தொடரிலும் சாதனைகளை புரிந்த வண்ணம் உள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 448 ரன்களை குவித்துள்ளார், விராட் கோலி. இதன் மூலம், நடப்பு தொடரில் அதிக ரன்களைக் குவித்து பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி டி20 போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இவரின் 2019 ஐபிஎல் தொடரின் பேட்டிங் சராசரி 35.25. எனவே, இவர் புரிந்த பல ஐபிஎல் சாதனைகளில் முக்கியமான ஆண்டு சாதனைகள் பின்வருமாறு,
#1. 5371 ரன்கள் - ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்:
ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார், விராத் கோலி. இவர் இதுவரை 167 இன்னிங்சில் களமிறங்கி 38.9 என்ற சராசரியுடன் 5376 ரன்களை குவித்துள்ளார்.
#2.973 - ஒரே ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரர்:
2016 ஐபிஎல் தொடரில் விராத் கோலியின் பங்களிப்பு உச்சத்திற்கே சென்றது. அந்த தொடரில் 16 இன்னிங்ஸில் விளையாடி 81.08 என்ற சராசரியுடன் 973 ரன்களை குவித்தார். அதுமட்டுமல்லாது, ஏழு அரை சதங்களும் நான்கு சதங்களையும் வெளுத்து வாங்கினார். மேலும், அந்த தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார்.
#3.229 ரன்கள் - அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:
ஏ.பி.டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கலம் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் இணைந்து பல பார்ட்னர்ஷிப்களை உருவாக்கியுள்ளார், விராத் கோலி. அதுபோல, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அணியின் சக வீரரான டிவிலியர்ஸ் உடன் இணைந்து 229 ரன்கள் குவித்தனர். விராத் கோலி 109 ரன்களையும் ஏபி டிவில்லியர்ஸ் 129 ரன்களையும் குவித்திருந்தனர். இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் இணைந்து 215 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
#4.பார்ட்னர்ஷிப்பில் மூன்று முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள்:
ஐபிஎல் தொடரில் மூன்று முறை பார்ட்னர்ஷிப்பில் 200 மேற்பட்ட ரன்களைக் குவித்த வீரர் விராட் கோலி டிவிலியர்ஸ் உடன் இணைந்து 229 மற்றும் 215 ரன்களையும் கிறிஸ் கெயில் உடன் இணைந்து 204 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் நான்கு முறை தான் 200க்கும் மேற்பட்ட ரன்களை கொண்ட பார்ட்னர்ஷிப் உருவாகியுள்ளது. அவற்றில் மூன்று முறை பெங்களூர் அணியின் சார்பாக விராத் கோலி புரிந்துள்ளார் என்பது மற்றொரு சிறப்பாகும்.