ஐபிஎல் 2019 : விராட் கோலியின் ஆக்ரோஷமான செயலுக்கு  பதிலளித்த அஸ்வின் 

Kohli and Ashwin
Kohli and Ashwin

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை அன்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸூம் மார்கஸ் ஸ்டோய்னிஸூம் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர், பின்னர் போக போக அதிரடியை காட்டினர்.குறிப்பாக டி வில்லியர்ஸ் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 82 ரன்களும் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த ஸ்டோய்னிஸ் 46 ரன்களும் எடுத்தனர். அவர்கள் இருவரின் உதவியால் பெங்களூர் அணி 202 ரன்கள் எடுத்தது.

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுலும் கிறிஸ் கெய்லும் நல்ல துவக்கம் அளித்தனர். அந்த துவக்கத்தை பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நிக்கோலஸ் பூரன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். குறிப்பாக நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடினார், மில்லர் மந்தமாக ஆடினார். இவர்கள் இருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் அவுட்டாகினர். இதனால் வெற்றி முழுமையாக பெங்களூர் அணி பக்கம் திரும்பியது.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பேட்டிங் செய்தார். உமேஷ் யாதவ் கடைசி ஓவரை வீசினார். அஸ்வின் முதல் பந்தை சிக்சராக அடித்தார். இரண்டாவது பந்தையும் சிக்சருக்கு தூக்க முயற்சி செய்தார், ஆனால் அது விராட் கோலியிடம் தஞ்சம் புகுந்தது. அப்போது விராட் கோலி ஆக்ரோஷமாக அஸ்வினை நோக்கி கத்தினார். அஸ்வின் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ததையும் கலாய்க்கும் விதமாக அதை போல செய்கை செய்து காட்டினார். இதனால் கோபமடைந்த அஸ்வின் பெவிலியனுக்கு திரும்பும் போது கையுறையை ஆக்ரோஷமாக கழட்டி வீசினார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பட்லரை ரன் அவுட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ள அஸ்வினுக்கு இந்த சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியின் செயலும் கண்டனத்திற்குரியது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஸ்வின் இப்போது பதிலளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அஸ்வின் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளதாவது :

"நானும் விளையாட்டில் அதீத ஆர்வத்துடன் விளையாடினேன், அதைப் போலவே விராட் கோலியும் விளையாடினார். வேறு எந்த காரணமும் இல்லை". இவ்வாறு அவர் கூறினார்.

அஸ்வினே இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டிவிட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்து விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டையும் உயர்த்தினால் மட்டுமே பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும். பஞ்சாப் அணிக்கும் இதே நிலை தான்.

Quick Links