ஐபிஎல் தொடர்: ரசிகர்களால் குறைவாக அறியப்பட்ட 5 ஐபிஎல் சாதனைகள்

முஸ்தபிஸுர் ரஹ்மான்
முஸ்தபிஸுர் ரஹ்மான்

உலகின் மிகவும் ரசிக்கப்படும் டி20 தொடரான ஐபிஎல், தனது 12வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் தொடக்க போட்டி வருகிற மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த 5 மாதங்கள் திருவிழா தான். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தப்படும். அனுபவ வீரர்கள் மட்டும் இல்லாமல் அறிமுக வீரர்களும் சில சாதனைகளை நிகழ்த்துவர். இதுவே இத்தொடரின் இன்னொரு சிறப்பம்சம்.

கடந்த 11 தொடர்களிலும் அவ்வாறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, ஒரு சில ரசிகர்களால் மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்ள கூடிய 5 சாதனைகளை இப்பதிவில் காணலாம்.

#5. முஸ்தபிஸுர் ரஹ்மான் - இந்தியன் இல்லாத வளர்ந்து வரும் வீரருக்கான(Emerging Player) விருது பெற்றவர்

2015ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரின் மூலம் சிறப்பாக பந்துவீசி உலக ரசிகர்களால் கவரப்பட்ட வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மான். பங்களாதேஷ் அணியை சேர்ந்தவரரான இவர் 2016ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளரான இவர் பந்தை கட் செய்வதில் வல்லவர். புவனேஸ்வர் குமார் உடன் ஜோடி சேர்ந்து ஹைதெராபாத் அணிக்கு பவர்பிலேவில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடினம் விளைவிக்க கூடியவர். அதே போல் 2016ம் ஆண்டு ஹைதெராபாத் அணி கோப்பை வெல்ல இவரது டெத் பௌலிங் ஒரு காரணம்.

இடது கை பந்துவீச்சாளரான இவர், 16 போட்டிகளில் பங்குபெற்று 17 விக்கெட்களை சாய்த்தார். சராசரியாக வேறும் 6.90 ரன்கள் மட்டுமே பதிவு செய்துள்ளார். இதுவே அந்த ஐபிஎல் சீசனில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வெல்ல காரணமாக அமைந்தது.

#4. பிராகியன் ஓஜா - பர்பில் கேப்பை கைப்பற்றிய ஒரே சுழற் பந்து வீச்சாளர்

பிராகியன் ஓஜா
பிராகியன் ஓஜா

வருடா வருடம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்களை சிறப்பிக்கும் விதமாக அளிக்கப்படும் விருது பர்பில் கேப். இதுவரை நடைபெற்ற 11 தொடரிலும் எதாவது ஒரு வீரர் இந்த விருதினை தட்டிச்செல்வர். ஆனால் இந்த பட்டியலில் இருக்கும் ஒரே ஒரு சுழற் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர் பிராகியன் ஓஜா. இடது கை சுழற் பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காகவும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது மிக சிறப்பான ஐபிஎல் சீசனாக அமைந்தது 2010ம் ஆண்டு.

டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடிய ஓஜா, 16 போட்டிகளில் பங்கேற்று 21 விக்கெட்களை சாய்த்தார். இவரது சராசரி வெறும் 6.50 என பதிவாகி உள்ளது. 2009 ஆம் ஆண்டு கோப்பை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதெராபாத், கோப்பையை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பின்பு சென்னை அணியிடம் எலிமினேட்டர் போட்டியில் தோற்று வெளியேறியது. புள்ளி பட்டியலில் டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதெராபாத் அணி 4வது இடம் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் ஓஜா.

#3. மனீஷ் பாண்டே மற்றும் பால் வால்டட்டி - சதம் அடித்த முதல் ஆன்-காப்ட்(uncapped) வீரர்கள்

மனீஷ் பாண்டே
மனீஷ் பாண்டே

2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாபிரிக்கா மண்ணில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த பெங்களூர் மற்றும் ஹைதெராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறி தொடரை விறுவிறுப்பாகியது. கடைசியாக நடைபெற்ற 6 லீக் போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கடைசி லீக் போட்டியில் சூப்பர் ஹீரோவாக அமைந்தவர் மனீஷ் பாண்டே. அதுவரை அணியில் இடம்பெறாமல் வெளியில் அமரவைக்கப்பட்ட இவர், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார்.

அதே போல அப்போதைய நிலையில் சதம் அடித்த முதல் அன்-காப்ட் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் பாண்டே. இந்த ஆட்டத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் மனீஷ் பாண்டே. 73 பந்துகள் விளையாடிய பாண்டே, 114 ரன்கள் குவித்தார். இதில் 10 பௌண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டியில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பால் வால்டட்டி
பால் வால்டட்டி

அதன் பிறகு 3வது ஐபிஎல் சீசனில் பால் வால்டட்டி அடித்த சதமும் பெருமைக்குரியதே. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகர்களுக்கு இடையேயான போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது. பின்பு கடினமான இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே அதிரடியை ஆடினார் பால் வால்டட்டி. பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக 120 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 63 பந்துகள் ஆடிய இவர், 19 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார். அபாரமான ஆட்டத்தால் பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடி கொடுத்த வால்டட்டி, மனீஷ் பாண்டேவிற்கு பிறகு சதம் அடித்த மற்றொரு அன்-காப்ட் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர்களுக்கு பிறகு இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#2. அணில் கும்ப்ளே - இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தும் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர்

அணில் கும்ப்ளே
அணில் கும்ப்ளே

இந்திய அணிக்காக அதிகமான சர்வதேச விக்கெட்களை எடுத்த வீரர் என்ற பெருமை பெற்ற அணில் கும்ப்ளே, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் சீசனில் மிகச்சிறப்பாக பந்து வீசினார். இரண்டாவது சீசனின் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்து சிறப்பாக தொடங்கினார். இரண்டாவது சீசனில் பெங்களூரு அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கும்ப்ளே, அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். இறுதிப்போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோதிய பெங்களூர் அணிக்கு முதல் ஓவர் வீசிய கும்ப்ளே, 3வது பந்திலேயே எதிரணி கேப்டன் கில்கிறிஸ்டை வீழ்த்தினார்.

பின்பு வரிசையாக சைமண்ட்ஸ், ரோஹித் ஷர்மா மற்றும் வேணுகோபால் ராவ் விக்கெட்களை வீழ்த்தி ஹைதெராபாத் அணியை நிலைகொலையச்செய்தார். இப்போட்டியில் 16 ரன்கள் வழங்கி 4 விக்கெட் எடுத்த கும்பலே ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். ஆனால் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.

#1. யுவ்ராஜ் சிங் - ஒரே போட்டியில் அரை சதம் மற்றும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்

யுவ்ராஜ் சிங்
யுவ்ராஜ் சிங்

இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த வீரர்களுள் ஒருவர் யுவ்ராஜ் சிங். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தொடரின் தொடர்நாயகன் விருதை பெற்றவர். ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இவரது செயல்பாடு மாறி மாறி தான் உள்ளது. இதுவரை 5 வெவ்வேறு அணிகளுக்காக எல்லா சீசனிலும் பங்குபெற்றுள்ளார். இருந்தாலும் இவரின் சாதனைகள் எண்ணில் அடங்காத ஒன்று. ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் அரை சதமும் அடித்து பின்பு அதே போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்து உலக சாதனை படைத்தார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவ்ராஜ், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தினார். முதலில் பந்து வீசிய பஞ்சாப் அணி, 144 ரன்களுக்கு பெங்களூரு அணியை சுருட்டியது. 145 எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் அடுத்து ஆடிய பஞ்சாப் அணிக்காக 34 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும், 3 பௌண்டரிகளும் அடங்கும். இருந்தாலும் இப்போட்டியில் பஞ்சாப் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதே மைதானத்தில் தான் யுவ்ராஜ் சிங் ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.