ஐ.பி.எல்.லை பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் நம்மை மெய் சிலிர்க்க செய்யும் வீரர்கள் பலர் . ஆனால் அதில் நிறைய பேர் அந்த சீசனுக்கு பிறகு முதல் தர அரங்கில் பெரிய அளவில் சாதிக்காததால் தன் ஐ.பி.எல் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பர். இதில் சில வீரர்கள் தன் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் நீண்ட நாட்களாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தனர். ஆனால், சில சீசன்களுக்கு பிறகு அவர்களின் ஐ.பி.எல் அணிகள் இளம் நட்சத்திரங்களைக் களமிறக்க முடிவு செய்ததால் தங்கள் அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்த வீரர்கள் பலர். அவ்வாறு கிரிக்கெட் மறந்த ஐந்து ஐ.பி.எல் நட்சத்திரங்கள் இதோ,
5. சித்தார்த் திரிவேதி ( Siddarth Trivedi )
2008-இல் ஷேன் வார்னிடம் தன் அசத்தல் பந்துவீச்சுக்காக பாராட்டு வாங்கியவர் சித்தார்த் திரிவேதி. 2008 ஐ.பி.எல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதால் தேர்வு குழுவினர் அவரை தீவிரமாகக் கண்காணிக்க துவங்கினர். இருப்பினும் அவர் இன்று வரை இந்திய அணியில் தேர்வு செய்யப்படவேயில்லை. முதல் சீசனில் சோகைல் தன்வீருடன் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். தனது ஐ.பி.எல் கரியரின் சிறந்த பந்துவீச்சை 4/25 2012-இல் பதிவு செய்தார். 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய பங்காற்றினார். 2013 சீசனில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் இவரின் கிரிக்கெட் வாழ்க்கை சோகமான முறையில் முடிந்தது.
4. திருமலாசெட்டி சுமன் ( Tirumalasetti Suman )
வலது கை பேட்ஸ்மேனான சுமன் , தன் கரியரின் தொடக்கத்தில் இருந்தே அதிரடி பேட்டிங்கால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சமீப காலங்களில், ஐதராபாத் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆஸ்திரேலிய வீரர் டேமியன் மார்டின் தான் இவரின் ரோல் மாடல். அவரைப் போலவே பார்ட் டைம் சுழற்பந்து வீச்சாளராக அசத்தினார் சுமன். 2012-இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 14 போட்டியில் 307 ரன்கள் குவித்தார். 2013-இல் புனே வாரியர்ஸ் அணி இவரை வாங்கியது . ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் ஐ.பி.எல் ஏலத்தில் விலைப் போகவில்லை.
3. வேணுகோபால் ராவ் ( Venugopal Rao )
2005-ல் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட ராவ், 16 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைச்சதம் கூட அடிக்காததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2008 ஐ.பி.எல் தொடரில் டெக்கான் அணிக்காக பினிஷராக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் குறிப்பாக அவர் கொல்கத்தா அணிக்கு எதிராக அடித்த 71 ரன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், அடுத்த இரண்டு சீசன்களில் மேட்ச்சை பினிஷ் செய்யத் திணறினார். மீண்டும் 2011-இல் டெல்லி அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் , ஆனால் வயது காரணமாக அதற்கடுத்த சீசன்களில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
#2 முனாஃப் படேல் ( Munaf Patel )
மித வேகப்பந்து வீச்சாளரான இவர், பல்வேறு தடைகளைத் தாண்டி இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால், பல விதமான காயங்களால் தன் கரியர் முழுதும் மிகவும் அவதிப்பட்டார். 2008-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார் . 2011 ஜ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வாங்கியது. அந்த சீசனில் மொத்தம் 22 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அதில் குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால் , காயம் காரணமாக அவரின் பவுலிங் வேகம் குறைய தொடங்கியதால் ரன்களை வாரி வழங்க ஆரம்பித்தார். 2013 அவரின் கடைசி ஐ.பி.எல் சீசனாக அமைந்தது.
#1 ஆர்.பி சிங் ( RP Singh )
தனது முதல் டெஸ்டிலேயே பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வாங்கியவர் ஆர்.பி.சிங். தனது சுவிங் பவுலிங்கால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். 2009-இல் டெக்கான் அணி ஐ.பி.எல் வெல்ல முக்கிய காரணம் ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு. அந்த சீசனில் மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தனது ஐ.பி.எல் கரியரில் மொத்தம் 87 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், காயம் மற்றும் முதல் தரப் போட்டிகளில் சோபிக்க தவறியதால் 2014-க்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை.
எழுத்து- இஷான்சன்
மொழியாக்கம்- அஜய்