ஐசிசி-யின் மூன்று வடிவிலான கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர், மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் இவர், மும்முறை சாம்பியன் பட்டத்தை வென்று தந்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் லீக்கிளும் இரு முறை பட்டத்தை வென்று தந்துள்ளார். 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்டுகள் சென்னை அணி தடைக்கு உள்ளானது. கடந்த ஆண்டு தடை காலத்திற்குப் பின்னர் மீண்டு வந்த சென்னை அணி, மூன்றாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அவ்வாறு, தோனியின் கேப்டன்சி நகர்வால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதித்த மூன்று முக்கிய நிகழ்வுகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஃபீல்டிங் மாற்றங்களால் முதல் ஐபில் பட்டத்தை வென்ற சென்னை அணி:
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் அசாத்திய ஃபீல்டிங் மாற்றங்களால் தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது, சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 168 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். பின்னர், களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் விக்கெட்டான சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அபாரமாக விளையாடிய அபிஷேக் நாயரை தோனி ரன் அவுட் செய்தார். பின்னர், அந்த தொடரின் வளர்ந்துவரும் வீரரான சவுரப் திவாரி களம் புகுந்தார். மிட்-விக்கெட் திசையில் சுரேஷ் ரெய்னா நின்று கொண்டிருந்த வேளையில் திவாரி அந்த இடத்தில் அடிக்க முற்பட்டார். ரெய்னா அபாரமாக அந்தப் பந்தை பிடித்து திவாரியை அவுட் செய்தார். பின்னர், 18 பந்துகளில் 55 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கீரன் பொல்லார்ட் களமிறங்கினார் மிட் - ஆஃப் மற்றும் லாங்க் - ஆஃப் திசைகளில் ஃபீல்டர்கள் கேப்டன் டோனியால் நிறுத்தி வைக்கப்பட்டனர். எதிர்பார்த்தவாறு பொல்லார்ட் மிட் - ஆஃப் திசையை நோக்கி அடித்த பந்தை லாவகமாக பிடித்து அவரை அவுட் செய்தனர். இந்த இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
#2.அஸ்வினை கொண்டு கிறிஸ் கெயிலை சாய்த்தனர்:
2011ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தந்த கேப்டனான மகேந்திர சிங் தோனி, புகழின் உச்சியில் இருந்தார். அந்த ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரு அணிகள் ஐபிஎல் தொடரின் புதிதாக இணைந்தன. இந்த தொடரில் நடைபெற்ற உள்ளூர் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எந்த ஒரு அணியாலும் தோற்கடிக்க முடியவில்லை. தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்று இரண்டாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எதிர் அணி தரப்பில் பலம்வாய்ந்த கிறிஸ் கெயிலின் விக்கெட்டை வீழ்த்துவதே இவர்களின் முதல் எண்ணமாக இருந்தது. ஏனென்றால், அந்த தொடரில் கெய்லின் தாக்கத்தை எந்த ஒரு அணியாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, கேப்டன் தோனி ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு கெய்லின் விக்கெட்டை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே, கூறி இருந்ததை போல ஆஃப் பிரேக் வித பந்துவீச்சில் கிறிஸ் கெயிலை ஆட்டமிழக்கச் செய்தார், அஸ்வின். இதன் மூலம், அந்த இறுதி ஆட்டத்தில் சுலபமாக வென்று ஐபிஎல் பட்டத்தை இரண்டாவது முறையாக தனதாக்கியது, சென்னை சூப்பர் கிங்ஸ்.
#3.வயதான ஆஷிஸ் நெஹ்ராவை பௌலிங் கூட்டணியில் இடம்பெற வைத்து வெற்றியைக் கண்டது சென்னை:
2010 முதல் 2013ஆம் ஆண்டு ஆண்டு வரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்த நான்கு ஆண்டுகளில் இரு முறை ஐபிஎல் பட்டத்தையும் இரு முறை ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது, சென்னை அணி. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அனுபவமிக்க பந்துவீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ராவை தங்களது அணியில் இணைத்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கிய இவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற தொடரில் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளினார். அந்த தொடரில் தனது துல்லியமான பந்து வீச்சு தாக்குதலால் 22 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மேலும், இவரது பவுலிங் எகனாமி 7.24 என்ற வகையில் அமைந்திருந்தது. இதன் காரணமாகவே, சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதன்மை வகித்தது. அந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பதிவான மிகச்சிறந்த பத்து பந்துவீச்சில் இவரது பந்துவீச்சு ஐந்து முறை இடம்பெற்றது. இதன் மூலம், இந்திய அணியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெற்று 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் முக்கிய பங்காற்றினார், ஆஷிஸ் நெஹ்ரா.