ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளையும் காண்பதற்கே விறுவிருப்பாக இருக்கும். ஆனால் அதைவிட விறுவிருப்பு என்னவென்றால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்களை எந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது என்பதை காண்பதுதான்.
இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்கள், ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அந்த வீரர்களைப் பற்றியும், விலை மதிப்பை பற்றியும் இங்கு காண்போம்.
#3) ரோகித் சர்மா ( 15 கோடி )
அதிக கோடிக்கு, ஏலத்தில் விலை போன வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார் ரோகித் சர்மா. இவர் இந்திய அணியில் நுழைந்த காலகட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக தான் விளையாடினார். அதன் பின்பு படிப்படியாக தனது சிறப்பான விளையாட்டின் மூலம், தோனியின் பரிந்துரையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு பல்வேறு சாதனைகளை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் படைத்து வருகிறார்.
அதுவும் குறிப்பாக இதுவரை யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அது என்னவென்றால் ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை தான். அவர் ஒரே இன்னிங்சில் 264 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது.
#2) தோனி ( 15.30 கோடி )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தோனி. ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அணியான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் இறுதிவரை விளையாடி எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கக் கூடிய திறமை படைத்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.30 கோடியைக் கொடுத்து தனது அணியில் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#1) விராட் கோலி ( 17.20 கோடி )
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போதைய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்பவர் விராட் கோலி. இந்திய அணியே இவரை நம்பித்தான் உள்ளது என்ற அளவிற்கு தனது திறமையின் மூலம் உலகையே தன்னை பார்க்க வைத்துள்ளார். தற்போதைய கிரிக்கெட் உலகில், அதிக ரசிகர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி மட்டும்தான்.
ஐபிஎல் தொடரில் இவரை ஏலத்தில் வெளியே விட்டால் அனைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். ஆனால் நம்பர்-1 பேட்ஸ்மேனை பெங்களூரு அணி விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. இவரை பெங்களூரு அணி 17.20 கோடியைக் கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது.