வருடம் தோறும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தொடர் என்றால் அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளும் மிக விறுவிறுப்பாக இருக்கும். எனவேதான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் தொடருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
புதுப்புது இளம் வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் திறமையான பந்து வீச்சாளர்கள், ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் அனைத்து போட்டிகளும் இறுதிவரை அனல் பறக்கும். இந்த ஐபிஎல் தொடரில் வருடம் தோறும் புதுப்புது வீரர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் இந்த வருடமும் சில வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு வருகை தந்துள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) சிம்ரான் ஹெட்மேயர்

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி வீரர்களில் ஒருவர் ஹெட்மேயர். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரின் ஏலத்தில் 4.20 கோடிக்கு எடுத்தது. ஹெட்மேயர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இளம் அதிரடி வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதுவும் குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக, அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்திய அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 259 ரன்கள் விளாசினார். இதில் ஒரு சதமும் அடங்கும். இவர் முதன் முறையாக ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டு வருகை தந்து உள்ளதால், சிறப்பாக விளையாடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#2) வருண் சக்கரவர்த்தி

தற்போது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசி வரும், சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது வருண் சக்கரவர்த்தி தான். மொத்தம் 9 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 8.40 கோடிக்கு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் சுழலில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3) ஆஸ்டன் டர்னர்

ஆஸ்டன் டர்னர், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் அதிரடி வீரர்களில் ஒருவர். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆஸ்டன் டர்னர். அதுவும் குறிப்பாக அந்த தொடரில் நான்காவது ஒரு நாள் போட்டியில் இறுதி வரை அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவார் என்று பல எதிர்பார்ப்புகள் இவர் மீது எழுந்துள்ளது.
#4) சாம் கரன்

இங்கிலாந்து அணியில் மிக முக்கியமான ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், சாம் கரன். இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்காக இவர் 9 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடி இருப்பதால், சொல்லும் அளவிற்கு சாதனைகள் எதையும் படைக்கவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 454 ரன்களையும், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் விளையாட உள்ளார்.
