இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்தவர்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்கள் என ஒவ்வொன்றிற்கும் தனி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல்தான் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு தனி விருது வழங்கி ஐபிஎல் நிர்வாகம் சிறப்பித்து வருகிறது.
அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலருக்கு பர்பில் கேப் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்களின் பட்டியலை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) ஷான் மார்ஷ் ( 2008 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர் ஆனது முதல் முறையாக 2008ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஷான் மார்ஷ், பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் ஷான் மார்ஷ். ஐபிஎல் தொடர் தொடங்கிய கால கட்டத்தில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரராக வலம் வந்தார் ஷான் மார்ஷ். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடிய இவர் 616 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றார்.
#2) மேத்யூ ஹைடன் ( 2009 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான மேத்யூ ஹைடன். இவர் 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் தலைசிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். அந்த 2009ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 572 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆரஞ்சு கேப் விருதினை பெற்றார்.
#3) சச்சின் டெண்டுல்கர் ( 2010 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான், மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வருபவரான சச்சின் டெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் படைக்காத சாதனைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு இவர் விளையாடிய 15 போட்டிகளில் மொத்தம் 618 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப் விருதினை பெற்றார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.