ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கில் சில முக்கியமான சாதனைகள் படைத்தவர் "மிஸ்டர் ஐ.பி.எல்" என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக ரெய்னா விளங்குகிறார். இந்த மெகா கிரிக்கெட் நிகழ்ச்சியின் முதல் ஏலத்தில் மஞ்சள் நிற ஜெர்சியில் 6,50,000 அமெரிக்க டாலருக்கு ரெய்னாவை சென்னை அணி வாங்கியது. ஐ.பி.எல் போட்டியில் ரெய்னா எப்போதும் சிறந்தவர். அவர் இதுவரை 4,985 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் அனைத்து பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்களை விட மிக இது உயர்ந்ததாகும். அவர் 5000 ரன்களைக் கடக்க இன்னும் 15 ரன்கள் மட்டுமே உள்ளது. வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரில் அவர் நிச்சயம் இதை சாதிப்பார். ஐ.பி.எல் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 86 கேட்ச்கள் பிடித்த முதல் வீரர் ஆவார். ஐ.பி.எல். வரலாற்றில் சுரேஷ் ரெய்னா விளையாடிய மூன்று சிறப்பான ஆட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.
3. 98 ரன்கள் 55 பந்துகள் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2009)
சுரேஷ் ரெய்னா டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை எப்போதுமே சிறப்பாக விளையாடியுள்ளார். 2009-ஆம் ஆண்டில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ரெய்னா ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். ஒரு முனையில் விக்கெட்கள் பறிகொடுத்த சென்னை அணி, மறுமுனையில் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்த ரெய்னா 55 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் பந்து வீச்சில் 2 ஓவருக்கு 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடினார். ரெய்னா தனது ஆல்-ரவுண்டர் திறமை மூலம் சென்னை அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். அவரது பேட்டிங் ஒரு சிறப்பான ஆட்டமாக இருந்தது. இதன் மூலம் அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
2. 100 ரன்கள் 53 பந்துகள் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2013)
ஐ.பி.எல் தொடரில் ஆறாவது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ரெய்னா தனது முதல் ஐ.பி.எல் சதத்தை அடித்தார். ஐ.பி.எல் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்ய ஆறு ஆண்டுகள் காத்திருந்தார் "மிஸ்டர் ஐ.பி.எல்" என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. ரெய்னா தனது முதல் 100 ரன்களை எட்டியபோது அவர் தனது அட்டகாசமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களையும் கவர்ந்தார். சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் குறைந்த ரன்களுக்கு விக்கெட் கொடுக்க பின்னர் வந்த ரெய்னா பந்து வீச்சாளர்களை கலங்க வைத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். சென்னை அணியின் வெற்றிக்கு ரெய்னாவின் ஆட்டம் பெரிதும் உதவியது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
1. 87 ரன்கள் 25 பந்துகள் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014)
ஐ.பி.எல் போட்டிகளில் மறக்க முடியாத ஆட்டம் என்றால் சுரேஷ் ரெய்னா 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் தான். அவரது ஆக்ரோஷமான ஆட்டம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இடையே நடந்த இரண்டாம் தகுதிச் சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 227 என்ற மாபெரும் இலக்கை வைத்தது. பஞ்சாப் அணியில் சேவாக் 122 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டுகள் பறிகொடுத்தாலும் ரெய்னா எதிரணியின் பந்து வீச்சாளர்களை பந்தாடினார். இதுவரை யாரும் பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 6 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து சென்னை அணி அசத்தியது. ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால் சென்னை அணி 7 வது ஓவரிலேயே ரெய்னாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
எழுத்து-வினய் சஹாபரியா
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்