நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒருமுறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற தவறியது. கடந்த இரு வருடங்களாக இந்த அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு இறுதியாக தகுதி பெற்றது. அந்த தொடரில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது, பெங்களூரு. அந்த தொடரில் 4 சதங்கள் உள்பட மொத்தம் 973 ரன்களைக் குவித்திருந்தார், விராட் கோலி. பின் வந்த தொடர்களில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் அணியின் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினார். மேலும், அணியின் பந்துவீச்சு மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இதனால், தொடர்ச்சியான தோல்விகளுக்கு இந்த அணி தள்ளப்பட்டது. எனவே, அடுத்த சீசனில் பெங்களூர் அணிக்கு பக்கபலமாய் அமைய தகுதியான 3 ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.ஆடம் சாம்பா:
ஆஸ்திரேலிய அணியின் குறுகிய கால சர்வதேச போட்டிகளில் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர், ஆடம் சாம்பா. பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. இறுதியாக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் புனே அணியில் இடம் பெற்றிருந்தார். அவற்றில் 11 போட்டிகளில் அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்றிருந்தார். அவற்றின் சிறந்த பந்துவீச்சாக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அள்ளினார். எனவே, அடுத்த சீசனில் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கு பக்கபலமாக இவர் செயல்படுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
#2.மிச்செல் ஸ்டார்க்:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபாயகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவர், மிச்செல் ஸ்டார்க். உலக கோப்பை போட்டியில் புத்துணர்வுடன் களம் காண நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து இவர் விலகினார். அடுத்த சீசனில் இவர் நிச்சயம் இடம்பெறுவார். இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், இவரது பவுலிங் எகனாமி 7-க்கு மிகாமல் உள்ளது. எனவே, அடுத்த சீசனில் பெங்களூர் அணி நிர்வாகம் இவரை தேர்ந்தெடுக்கலாம்.
#3.பேட் கம்மின்ஸ்:
சர்வதேச அனைத்து 3 வடிவிலான போட்டிகளுக்கும் ஏற்ற வீரர், பேட் கம்மின்ஸ். இவர் தற்போதைய ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவரும் மிட்செல் ஸ்டார்க்கை போல உலகக்கோப்பை காரணங்களால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதுவரை 16 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மேலும் 20 சர்வதேச டி20 போட்டிகளில் இருபத்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் ஓரளவுக்கு செயல்படக்கூடிய இவர், பெங்களூர் அணியில் இடம்பெற்றால் அணிக்கு அடுத்த சீசனில் சிறப்பாக செயல்படுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.