ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 5 முன்னணி ஆல்ரவுண்டர்கள்

டுவைன் பிராவோ மற்றும் பொல்லார்ட்
டுவைன் பிராவோ மற்றும் பொல்லார்ட்

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு டி20 தொடர் என்றால் அது ஐபிஎல் தான். வருடா வருடம் நடக்கக்கூடிய இந்த தொடரின் 12வது சீசன் வருகிற மார்ச் மாதம் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளும் பலமிக்க அணி என்பதால் தொடக்கமே விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து வருகிற மே மாதம் ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டங்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் தொடங்க இருக்கிறது. ஆதலால் போதிய பார்ம் இல்லாத வீரர்கள் ஐபிஎல் இல் சிறப்பாக விளையாட வேண்டும் என எண்ணுவர்.

அதே சமயம் பெரும்பாலான முன்னணி வீரர்கள் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முழு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என ஒரு செய்தி வருகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், இத்தொடரின் பிற்பகுதி சுவாரசியம் குறைந்து விடும் என அணியின் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.

ஒரு டி20 போட்டியில் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளரை தாண்டி அணிக்கு மிகவும் அவசியமான ஒருவர் ஆல்ரவுண்டர். சரியான நேரத்தில் விக்கெட் எடுக்க உதவுவார்கள் மற்றும் அணிக்கு தேவைப்படும் சமயத்தில் நிலைத்து ஆடி ரன்கள் சேர்க்கவும் உதவுவர். இந்திய அணியை பொறுத்த வரை ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் இன்னும் சில ஆல்ரவுண்டர்கள் ஐபிஎல் மூலமே தங்கள் திறமையை நிரூபித்தனர். உலகளவில் நாம் பார்த்தால் கிறிஸ் மோரிஸ், கெய்ரோன் பொல்லார்ட் ஆகிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச அணியில் தங்கள் தேர்வை நிலைநாட்டினர். அப்படிப்பட்ட 5 முன்னணி ஆல்ரவுண்டர் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

இந்த பட்டியலில் இடம் பெறாமல் இருந்தாலும் சிறப்பான ஆட்டம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தவர்கள்: பென் ஸ்டோக்ஸ், சுனில் நரேன், ஹர்திக் பாண்டியா, ஷகிப் அல் ஹசன் மற்றும் ஜேம்ஸ் பால்க்னர்.

#5 கெய்ரோன் பொல்லார்ட்

கெய்ரோன் பொல்லார்ட்
கெய்ரோன் பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான ஆல்ரவுண்டரில் இவரும் ஒருவர். மும்பை அணி சாம்பியன் வென்ற 3 தொடரிலும் இவரின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது. மேற்கிந்திய தீவைச் சேர்ந்த டிரினிடாட் டொபாகோ அணிக்காக விளையாடி வந்த பொல்லார்ட், சாம்பியன்ஸ் லீக் தொடர் மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்தார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்க காரணமாக அமைந்ததும் இவரது சாம்பியன்ஸ் லீக் ஆடடம் தான். 2013, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் இடம் பிடித்திருந்தவர் பொல்லார்ட்.

இதுவரை 132 ஐபிஎல் இன்னிங்சில் 2476 ரன்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 28.13 ரன்கள் என்றாலும் ஸ்ட்ரைக் ரேட்டாக 145.73 வைத்துள்ளார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் உதவக்கூடிய இவர் 56 விக்கெட்களை சாய்த்துள்ளார். 31 வயதான இவர், பீல்டிங்கில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்பது போல் பௌண்டரி அருகே பந்தை லாவகமாக பிடிப்பதில் கைதேர்ந்தவர்.

#4 ஆண்ட்ரே ரசல்

ஆண்ட்ரே ரசல்
ஆண்ட்ரே ரசல்

உலகின் தற்போதைய டி20 ஆல்ரவுண்டர் பட்டியலில் இவருக்கு முதல் இடம் கொடுக்கலாம். துல்லியமாக பந்துவீசுவதில் ஆரம்பித்து, எதிரணியின் பந்துவீச்சாளர்களை நிலை குலைய செய்வது மட்டுமின்றி பீல்டிங்கிலும் அபார திறமை உள்ளவர். குறைந்த பந்துகளில் அதிவேகமாக அணிக்கு ரன்கள் சேர்த்து கொடுப்பதில் வல்லவர். டி20 தொடருக்காகவே தன்னை அர்ப்பணித்து ஆடக்கூடிய வீரர் ரசல். உலகின் அனைத்து முன்னணி டி20 தொடரிலும் தன்னுடைய பங்கை அளிக்க கூடியவர். 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடர் நாயகன் வென்ற ரசல், இதுவரை 50 ஐபிஎல் போட்டிகளில் 890 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் யாருக்கும் இல்லாத ஸ்ட்ரைக் ரேட்டாக 177.29 வைத்துள்ளார்( குறைந்த பட்சம் 125 பந்துகள் விளையாடியர்வகள்). 30 வயதான ரசல் 44 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

#3 ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

ஐபிஎல் இன் தொடக்க ஆண்டில் இருந்தே விளையாடி வரும் ஜடேஜா, ராஜஸ்தான் அணிக்காக தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். முதல் சீசனில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணியில் இவரது பங்கும் கொஞ்சம் இருந்தது. 2012 ஆம் ஆண்டு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ஜடேஜா, 2 மில்லியன் யூஎஸ் டாலருக்கு வாங்கப்பட்டார். பீல்டிங்கில் வல்லவரான இவர், ஸ்டம்பை குறிவைத்து ரன் அவுட் செய்வதில் கைதேர்ந்தவர். 154 ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்று 1821 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 23.64 ரன்கள் எடுத்துள்ள ஜடேஜா, அருமையான இடது கை சுழற்பந்து வீச்சாளர்.

மிடில் ஓவர்களில் எதிரணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த உதவுவதோடு, விக்கெட் எடுக்கவும் தவறியதில்லை. 30 வயதான இவர், இதுவரை 93 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். எகானமி ரேட்டாக 7.76 என வைத்துள்ளார்.

#2 டுவைன் பிராவோ

டுவைன் பிராவோ
டுவைன் பிராவோ

சமீபத்தில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய அணி வீரரான இவர், விளையாடாத டி20 தொடரே இல்லை என கூறலாம். உலகின் அனைத்து முன்னணி டி20 அணிக்காகவும் விளையாடியுள்ள டுவைன் பிராவோ, அந்த அணி கோப்பை வெல்லவும் காரணமாக இருந்துள்ளார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக விளங்கக்கூடிய பிராவோ, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என சொல்லலாம். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும், கடைசி ஓவர்களில் இவர் மெதுவாக வீசும் பந்துகளை ஆட திணறுவர். 122 ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்றுள்ள பிராவோ, 1379 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், சராசரியாக 23.77 ரன்கள் வைத்துள்ளார். ஆட்டத்தின் தன்மைக்கேற்ப ஆட கூடிய பிராவோ, அணிக்கு தேவைப்பட்டால் அதிரடியாகவும் ஆடக்கூடியவர்.

35 வயதான இவர், 136 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் இவருக்கு 4வது இடம். அதே சமயம் பேட்டிங்கில் 1000 ரன்களை கடந்து, 100 விக்கெட்கள் மேல் வீழ்த்தியுள்ள ஒரே அல்ரவுண்டெர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

#1 ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவரான இவர், தனி ஆளாய் அணிக்கு வெற்றி தேடி தரக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவர். முதல் ஐபிஎல் சீசனில் இருந்தே விளையாடி வரும் இவர், ராஜஸ்தான் அணி 2008 ஆம் ஆண்டு கோப்பை வெல்ல முழு காரணமாக இருந்துள்ளார். அந்த சீஸனின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். இவர் எந்த அணியில் இருந்தாலும் அந்த அணிக்கு கடுமையாக உழைக்க கூடியவர். பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் வல்லவரான இவர், நியூ பால் மற்றும் ஓல்ட் பால் என இரண்டிலும் வேறுபட்ட பந்து வீசுவதில் திறமைமிக்கவர். ஆஸ்திரேலிய அணிக்காக பல போட்டிகளை வென்று தந்துள்ளார்.

117 ஐபிஎல் போட்டிகளில் 3177 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 32.41 ரன்கள் எடுத்துள்ள வாட்சன், பந்துவீச்சில் 97 விக்கெட்களை சாய்த்துள்ளார். 37 வயதான வாட்சன் 4 முறை சதம் விளாசியுள்ளார். சென்ற ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய இவர் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி சென்னை அணி மீண்டும் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்.

Edited by Fambeat Tamil