உலகின் மிகவும் பிரபலமான டி20 தொடரான ஐபிஎல் வருகிற மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னையில் தொடங்கும் எனவும், நடப்பு சாம்பியன் சென்னை பரம எதிரியான பெங்களூர் அணியை எதிர்கொள்ளும் எனவும் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
சர்வேதேச அளவில் சாதிக்காத வீரர்கள் கூட ஐபிஎல்-இல் பிரமாதமாக செயல்பட்டு சர்வதேச அணியில் இடம் பிடிப்பர். இதுவே ஐபிஎல் தொடரின் சிறப்பம்சம். வருகின்ற ஐபிஎல் 2019 தொடரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய 3 டி20 ஜாம்பவான்கள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.
#3 டேவிட் வில்லி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக சமீபத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார் டேவிட் வில்லி. இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இதுவரை 171 டி20 போட்டிகளில் விளையாடி 160 விக்கெட்களை சாய்த்துள்ளார். பேட்டிங்கிலும் நல்ல ரெகார்ட் வைத்துள்ள இவர், 128 இன்னிங்சில் 2545 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 24.23ம் ஸ்ட்ரைக் ரேட்டாக 140.76ம் வைத்துள்ளார். இதில் 2 சதமும் 11 அரை சதமும் அடங்கும்.
ஐபிஎல் 2018ல் சென்னை அணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே பங்குபெற்ற வில்லி, எகானமி ரேட்டாக 9.5 மற்றும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆனால் இந்த முறை இவரின் பங்கு பெருமளவில் இருக்கும் என நம்பப்படுகிறது.
#2 கோலின் இங்கிராம் (டெல்லி கேபிட்டல்ஸ்)
இடது கை தென்னாபிரிக்கா பேட்ஸ்மேனான இங்கிராம், டி20 போட்டிகளில் மிகவும் நேர்தியானவர். உலகின் அனைத்து முன்னணி லீக் தொடரிலும் விளையாடியுள்ள இவர், பௌலிங்கிலும் லெக் பிரேக் முறையில் சூழல் பந்து வீசக்கூடியவர். இதுவரை 218 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இங்கிராம் 5557 ரன்களும் சராசரியாக 30.53 ரன்னும் எடுத்துள்ளார். பந்துவீச்சில் ஓரளவுக்கு வீசக்கூடிய இவர் 67 இன்னிங்சில் 38 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஷ் தொடரில் அடிலெய்டு அணிக்காக விளையாடிய இங்கிராம், 13 இன்னிங்சில் 333 ரன்களும் , 1விக்கெட்டும் எடுத்தார். வருகிற ஐபிஎல் 2019 தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடவிருக்கும் இவர், இந்த முறை சிறப்பாக விளையாடி மீண்டும் தென்னாபிரிக்கா அணியில் இடம் பிடிப்பாரா என்பதை காணலாம்.
#1 ஜோ டென்லி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த உள்ளூர் ஆல்ரவுண்டர்களுள் ஒருவரான டென்லி, வலது கை பேட்டிங் மற்றும் சூழல் பந்து வீச்சாளர். இங்கிலாந்தில் நடைபெறும் டி20 ப்ளாஸ்ட் தொடரின் நட்சத்திர வீரர். 32 வயதான இவர் 199 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 5001 ரன்களும் சராசரியாக 28.25 ரன்னும் எடுத்துள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை 31 இன்னிங்சில் 29 விக்கெட்டுடன், சிறந்த பந்துவீச்சின் வடிவமாக 19/4 எடுத்துள்ளார். வருகிற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடஉள்ள டென்லி, 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தனது திறமையை நிரூபித்து வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பது வருகிற தொடரில் தெரிந்துவிடும்.