2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அருமையான தொடக்கத்தை அளித்துள்ளது.
ஐபிஎல் சீசன் 12
12வது ஐபிஎல் தொடர் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இன்று(மார்ச்-23) தொடங்கியது. இதன் முதல் போட்டியில் கடந்த ஐபிஎல் தொடரின் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.இவ்வருட ஐபிஎல் தொடரில் தொடக்க விழா ஏதும் இல்லை என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. தொடக்க விழாவிற்கு செலவிடும் பணத்தை புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 7:30ற்கு அளிக்கப்படவிருந்ததால் டாஸ் 6 நிமிடங்களுக்கு முன்னதாகவே போடப்பட்டது. டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை ஆடும் XI: ஷேன் வாட்சன், அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், டுயன் பிரவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், தீபக் சகார், ஷர்துல் தாகூர்.
பெங்களூரு ஆடும் XI: பார்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), மொய்ன் அலி, ஏபி. டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹட்மயர், காலின் டி கிரான்ட் ஹாம், சிவம் தூபே, நவ்தீப் சய்னி, யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்னிங்ஸ்:
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் பார்திவ் படேல் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை தீபக் சகார் வீசினார். அவருடன் முதல் பவர் பிளேவில் ஹர்பஜன் சிங் வீசினார். முதல் 3 ஓவரில் பொறுமையாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 3.3வது ஓவரில் ஹர்பஜன் சிங் வீசிய பந்தில் ஜடேஜாவிடம் 6 ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய மொய்ன் அலியும் 9 ரன்களில் ஹர்பஜன் சிங்-டம் காட்டன் போல்ட் ஆனார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த காட்டன் போல்ட் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக காட்டன் போல்ட் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அதன்பின் களமிறங்கிய எந்த வீரர்களும் நிலைத்து விளையாடமல் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பெங்களூரு அணி 17.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்தீவ் படேல் 35 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களை எடுத்தார். பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான் ஏபி. டிவில்லியர்ஸ் 9 ரன்களும், ஹட்மயர் ரன் ஏதுமின்றியும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
சென்னை அணியை பொறுத்தவரை ஹர்பஜன் சிங்கின் அற்புதமான சுழலால் பெங்களுரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தியதால் அதற்கு மேல் அவர்களால் எழ முடியவில்லை. இம்ரான் தாஹீர் மற்றும் ஜடேஜா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இம்ரான் தாஹீர் 3 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டுயன் பிரவோ தான் வீசிய முதல் பந்திலேயே பார்தீவ் படேலின் விக்கெட்டை வீழ்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்:
71 என்ற எளிதான இலக்குடன் ஷேன் வாட்சன் மற்றும் அம்பாத்தி ராயுடு சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை யுஜ்வேந்திர சகால் வீசினார். 2.1 வது ஓவரில் யுஜ்வேந்திர சகாலின் சுழலில் ஷேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ராயுடுவுடன் கைகோர்த்து சிறிது நேரம் விளையாடினார். பவர்பிளே ஓவர் முடிவில் சென்னை 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் 4வது குறைவான பவர்பிளே ரன்களாகும்.
8.5வது ஓவரில் சுரேஷ் ரெய்னா 1 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். 9.2வது ஓவரில் மொய்ன் அலி வீசிய பந்தில் சுரேஷ் ரெய்னா சிவம் தூபே-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 21 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ், ராயுடுவுடன் கைகோர்த்து இலக்கை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்பாத்தி ராயுடு, முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 29 ரன்களை எடுத்தார். அதன்பின் ரவீந்திர ஜடேஜா களமிறங்கி, கேதார் ஜாதவ்-வுடன் சேர்ந்து 17.4வது ஓவரில் இலக்கை எட்டினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால் 4 ஓவர்களை வீசி 1 மெய்டனுடன் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இவர் தனது பௌலிங்கில் 6 ரன்கள் மட்டுமே அளித்தது குறிப்பிடத்தக்கது. மொய்ன் அலி 4 ஓவர்களை வீசி 19 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
போட்டியின் முடிவிற்கு பிறகு தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது: "ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இவ்வாறு இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஒரு இது ஒரு நல்ல போட்டி. குறைந்த இலக்கிலும் 18 ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்ற எங்களது பந்துவீச்சாளர்களை பாரட்டுகிறேன். 140-150 என்பது இந்த மைதானத்தில் ஒரு பாதுகாப்பான இலக்காகும். நவ்தீப் சைனி சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டார். சென்னை அணி சிறப்பாக விளையாடியது".
முதல் போட்டியின் வெற்றி குறித்து தோனி கூறியதாவது, "தொடக்கத்திலே விக்கெட்டுகள் விழும் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சி ஆட்டத்தில் இந்த மைதானத்தில் 30 ரன்களுக்கு மேல் அடிக்க முடிந்தது. இந்தப்போட்டி 2011 சேம்பியன் லீக் போட்டியை நியாபகப் படுத்துகிறது. 80,90 என்பது இந்த மைதானத்தில் குறைவான ரன்களாகும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இந்த மைதானம் உள்ளது. ஹர்பஜன் சிங் பந்தை சிறப்பாக வீசினார். இந்த மைதானத்தில் விளையாடும் மற்ற அணிகளில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை".