இந்திய அணியின் ஆல்ரவுண்டரான இர்பான் பதான், ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணிக்கு இனிவரும் உள்ளூர் போட்டிகளில் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பணிகளில் இணைய உள்ளதாக முடிவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷன் இவரை வீரர் மற்றும் ஆலோசகராக நியமித்தது. பரோடா அணியை சேர்ந்தவரான இவர், தனது காண்ட்ராக்டை நீடித்து உள்ளார். இருப்பினும், இம்முறை அந்த அணிக்கு வீரராக இடம்பெறப்போவதில்லை. இதற்கு முந்தைய உள்ளூர் தொடர்களில், இர்பான் பதான் ஜம்மு காஷ்மீர் அணிக்காக அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் இடம்பெற்றார்.
இதன் மூலம், ஒரு சிறந்த சராசரியையும் வைத்திருந்தார். உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் அவ்வப்போது சில முறை ஜம்மு காஷ்மீர் அணிக்காக சில பயிற்சிகளை அளித்திருந்தார். இந்தப் பயிற்சியின் மூலம் கிடைத்த அனுபவத்தின் பேரில் ஜம்மு-காஷ்மீர் வீரர் ரசிக் சலாம் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரராக அங்கம் வகிக்கிறார். கடந்த ஆண்டு சிறப்பானதொரு தொடரை அளித்திருந்த போதிலும் இம்முறை ஜம்மு காஷ்மீர் அணியின் பயிற்சியாளர் பணியில் ஈடுபட போவதாக முடிவெடுத்திருக்கிறார்.
சமீபத்தில், இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது புதிய பரிணாமத்தை தொடங்கவிருக்கிறார் இர்பான் பதான்.
"ஆம் உண்மையில் இர்பான் பதான் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷனிடம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இவர் இனி பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக எங்கள் அணிக்கு செயல்படுவார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இடம்பெற்று வரும், இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் முடிந்த பின்பு காஷ்மீர் அணியில் இணைவார்", எனவும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேசனின் தலைமை செயல் அதிகாரி ஆஷிக் புக்காரி தெரிவித்திருந்தார் .கடந்த வருடத்தில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக இவர் முதல்முறையாக இடம்பெற்றுள்ள இருந்ததால் இம்முறை ஜம்மு காஷ்மீர் அணி நிர்வாகம் அனுபவமிக்க இவரை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது.
"இது அனைத்து வீரர்களின் விருப்பமாகும். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுமட்டுமல்லாது, அவ்வப்போது வீரர்களின் கருத்தையும் கேட்டு வந்தோம். ஒட்டு மொத்தத்தில் அணியினர் அனைவரும் நேர்மறையான விமர்சனத்தை முன்வைத்தனர். கடந்த சீசனில் ஒரு வீரராக இருந்தவர், இம்முறை தொடர விரும்பாததால் திறமைமிக்க இவரை பயிற்சியாளராக மாற்றி எங்களது கிரிக்கெட்டை மேம்பட செய்கிறோம்", என்றும் கூறியுள்ளார் தலைமை செயல் அதிகாரியான ஆஷிக் புக்காரி.
இறுதியாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக 2012ம் ஆண்டில் விளையாடிய இர்பான் பதான், அவ்வப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டரான இவர் விரைவில் அனைத்து தரப்பிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.