அதாகப்பட்டது.. 1960 - 70 களில் இருந்தே உலகத்தரம் வாய்ந்த அற்புதமான சுழல் பந்துவீச்சாளர்களை கிரிக்கெட் உலகிற்கு தந்து வந்து உள்ளது இந்தியா. முன்னாள் இந்திய கேப்டன் டைகர் பட்டோடி புழுதி மிகு துணைகண்ட மைதானங்களில் நடக்கும் டெஸ்டுகளில் சுழற்பந்துவீச்சை பிரதான படுத்தி பார்த்தால் என்ன என்பதை சிந்தித்து அதை செயல் படுத்த துவங்கினார்.எரப்பள்ளி ப்ரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன் மற்றும் ஸ்பின் சர்தார் என்றழைக்கப்பட்ட பிஷன்சிங் பேடி ஆகியோர் கொண்ட நால்வர் கூட்டணி துணைகண்ட மைதானங்கள் மட்டுமன்றி உலகெங்கும் இருந்த எல்லா பெரும்பான்மை ஆடுகளங்களிலும் விக்கெட்டுகளை வேட்டையாடி இந்திய அணியின் சுழல் பாரம்பரியத்தை துவங்கி வைத்தது. இந்த நால்வர் குழுவின் புள்ளிவிவரங்களை கூட்டி கணக்கிட்டால் தங்களுக்குள் மொத்தமாக சேர்த்து 231 டெஸ்டுகளில் 853 விக்கெட்டுகளை தட்டி பறித்திருந்தனர் இந்த சுழல் சூறாவளிகள்.
பின்னர் 80 களின் துவக்கத்தில் இடதுகை ஸ்பின்னர்கள் மணிந்தர்சிங்கும் ரவிசாஸ்திரியும் அணிக்குள் வந்து சில வருடங்கள் கொடி நாட்டி கோலோச்சினர். 80 களின் இறுதியில் பலம் வாய்ந்த பராக்கிரம மேற்கிந்திய தீவுகளுக்கு உடனான தொடர். இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வியை தழுவி இருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டுகள் ட்ராவில் முடிந்தன. நான்காவது டெஸ்ட் சென்னையில் துவங்கியது. முந்தைய மூன்று டெஸ்டுகளில் சிறப்பாக செயல்பட்டிராத மணிந்தர் சிங்குக்கு ஓய்வை தந்து விட்டு ஆப்ஸ்பின்னர் அர்ஷாத் அயூப்புடன் லெக்ஸ்பின்னராக புதுமுகம் நரேந்திர ஹிர்வானியை உள்ளிறக்கினார் இந்திய கேப்டன். கை மேல் பலனாக முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளையும் இரண்டாவதில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கும் வெற்றியை தேடி தந்தார் ஹிர்வானி. விவியன் ரிச்சர்ட்சின் மட்டை ஆளுகையில் மேற்கிந்திய தீவுகள் உலகெங்கிலும் வெற்றிகளை குவித்து வந்த காலகட்டமது இன்றளவும் அந்த சென்னை வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவியலாது.
ஹிர்வானி, மணிந்தர் ஆகியோரின் ஆதிக்கம் மட்டுபட துவங்கிய 90 களின் மத்தியில் அணிக்குள் வந்தவர் அனில் கும்ப்ளே. பாகிஸ்தானுடனான் ஒரே இன்னிங்சில் ஒட்டு மொத்த10 விக்கெட்டுகள் போன்ற மகத்தான சாதனைகளை பிற்காலங்களில் தனதாக்கி கொண்டவர். லெக்ஸ்பின்னரான இவருக்கு ஆரம்ப சுழல் ஜோடியாக அமைந்தவர்கள் வெங்கடபதி ராஜு மற்றும் ராஜேஷ் சவுகான். அசாருதின் தலைமையில் இந்த ஸ்பின் - ட்ரையோ என்றழைக்க பட்ட சுழல் மும்மூர்த்திகள் பெற்ற வெற்றிகள் அனேகம். இங்கிலாந்து, இலங்கை, நியுசிலாந்து என அந்த குறிப்பிட்ட காலங்களில் இந்தியாவில் வந்து டெஸ்ட் விளையாடிய அனைத்து நாடுகளுக்கெதிராகவும் சர்வநாசம் விளைவித்தது இந்த மும்மூர்த்திகள் அணி. குறிப்பாக இங்கிலாந்துடன் ஒரு தொடரில் 3-0 என்கிற கணக்கில் இங்கிலாந்திற்கு ஒயிட்வாஷ் தோல்வியை பரிசளித்தது அசாருதின் தலைமையில் அமைந்த இந்த சுழல் கூட்டணி.
சவுகானும் ராஜுவும் சற்று திறமை மங்கிய சூழலில் 2000/01ல் அணியில் இடம்பிடித்த ஹர்பஜன்சிங் அதுவரை கெத்தாக திரிந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் ஹாட்ரிக்கை எடுத்து அதன் பேட்டிங் ஆர்டரை சிதைத்து அனுப்பினார். அது வரையிலும் தொடர்ந்து பதினாறு டெஸ்டுகளில் வெற்றி பெற்று வெல்லவே முடியாத அணியாக இந்தியா வந்திறங்கியிருந்தது வாக் தலைமையிலான அந்த ஆஸ்திரேலியா அணி.இந்த பக்கம் புதிய கேப்டன் சௌரவ் கங்குலி தலைமையில் அவர்களை எதிர்கொண்ட இந்தியா அணியிலோ முழுக்க முழுக்க இளமை பட்டாளங்கள். ரிசல்ட் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக ஒருதலை பட்சமாக தான் அமையும் என பத்திரிகைகள் எழுதி இருந்தன.ஆனால் நடந்த கதையே வேறு. ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் பாஜியிடம் தொடர்ந்து வீழ்ந்து மொக்கை வாங்கினார். ஒரு பக்கம் கும்ளேவையும் மறுபக்கம் பாஜியையும் சமாளித்து சோபிக்க முடியாத ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து வென்ற பதினாறு டெஸ்டுகளூக்கு பின்னர் இளம் இந்தியாவிடம் தோற்று சீரிஸை இழந்து தலையை தொங்க போட்டு கொண்டது. ஸ்டிவ் வாக்கை அவரது கனவிலும் தொடர்ந்து பயமுறுத்த கூடிய மரண மாஸ் சங்கதியை நிகழ்த்தி காட்டியது சவுரவ் கங்குலி தலைமையிலான அந்த அணி. இதன் பின்னர் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா என இன்றளவிலும் இந்திய அணியில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் தொடர தான் செய்கிறது.
இது ஒரு புறம் இருக்க இந்திய பேட்ஸ்மேன்கள் ஃபேஸ்பவுலிங்கிற்கு தடுமாறினாலும் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கி விடுவர் என்பது தான் வரலாறாக இருந்தது. 80 களின் காலந்தொட்டு சுழல் வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட அசாருதின், வெங்சர்க்கார், ஸ்ரீகாந்த் என பலர் இந்திய அணியில் இருந்தார்கள். அப்போது ஸ்பின் பவுலர்கள் போடும் ஓவர்களில் தான் இந்திய அணியின் ஸ்கோரே மிக விரைவாக உயரும் என்கிற அளவில் இருந்தது. கபில் நல்ல ஃபார்மில் இருக்கும் போது கிடைக்கும் ஸ்பின்னரை பவுண்டரியும் சிக்சருமாக சிதைத்து அனுப்பி விடுவார். அடுத்த தலைமுறையில் சச்சின், சவுரவ், சேவாக் போன்ற பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ஒவ்வொரு ஆஸ்திரேலிய இந்திய சீரிஸின் போதும் எழும் சச்சினா - வார்னேவா என்கிற கேள்விக்கு தனது மட்டையால் பதிலுரை விளக்கியிருப்பார் சச்சின். தன்னை மிஞ்ச வார்னேவை சச்சின் அனுமதித்த கணங்கள் வெகு சொற்பமே.
சவுரவை எடுத்து கொண்டால் அவர் தனது க்ரீசை விட்டு ஒரு இரண்டடி முன் எட்டு வைத்து ஸ்பின் பவுலிங்கை லாப்ட் செய்தார் எனில் பந்தை மைதான கூரைகளில் தான் தேட வேண்டி வரும். 50 ரன்களை கடந்த சவுரவிடம் சிக்கும் சுழல் பந்துவீச்சாளர் நரக வேதனையை தான் அனுபவித்திருப்பார். சச்சினும் சவுரவுமாவது சமயங்களில் பந்துவீச்சாளர்களின் பேரை பார்த்து தேர்ந்தெடுத்து தாக்க தொடங்குவார்கள். சேவாக் பொதுவாகவே எப்படிப்பட்ட பந்துவீச்சாளருக்கும் அவருக்குண்டான மரியாதையை அளிக்கவெல்லாம் யோசித்ததில்லை. வேகப்பந்து சுழல்பந்து என்கிற பாகுபாடுகளும் கிடையாது. ஸ்பெஷலாக ஸ்பின்னர்கள் சிக்கினால் எனில் சிதறல் தான். உலக அரங்கில் வெற்றி கொடி நாட்டிய எல்லா சுழல் பந்துவீச்சாளர்களையும் எடுத்து கொள்வோமே. ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னே, ப்ரட் ஹாக், பாகிஸ்தானின் அப்துல்காதிர், முஷ்டாக் அகமது, இங்கிலாந்தின் கிரியாம் ஸ்வான், சவுத் ஆப்ரிக்காவின் ஆப்ஸ்பின்னர் பாட் சிம்காக்ஸ், சைனாமேன் பால் ஆடம்ஸ், இலங்கையின் லெஜன்ட் முத்தையா முரளிதரன், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, வங்கதேசத்தின் சகிப் அல் ஹசன், போன்றோர் உலகம் இதுவரையிலும் கண்ட சிறந்த சுழற்பந்து ஸ்பெஷலிஸ்டுகள். இவர்கள் அனைவரையுமே வெவ்வேறு தருணங்களில் மிக சிறப்பாக எதிர்கொண்டு அதகள படுத்தியிருப்பார்கள் நம் இந்தியா பேடஸ்மேன்கள்.இந்தியாவிற்கு எதிராக ஓரிரு போட்டிகளில் மிக நன்றாக பந்து வீசிய சுழற்பந்துவீச்சாளர்களும் உண்டு தான்.பாகிஸ்தானின் சக்லைன்,தனிஷ் கனேரியா, இலங்கையின் அஜந்தா மெண்டிஸ், நியூஸிலாந்தின் தீபக் படேல், தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் மெக்கில், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் ஆகியோர் வெகு அரிதாக இந்தியாவுடன் சிறப்பாக செயல் பட்ட சுழற்பந்துவீச்சாளர்கள். ஆனால் அவர்களுடனான அடுத்தடுத்த போட்டிகளில் அதை விட சிறப்பாக சீர்வரிசைகள் திருப்பி அனுப்பியிருந்தனர் இந்திய மட்டை வீரர்கள்.
இப்படி பெருமை வாய்ந்த பாரம்பரியம் உள்ள இந்திய அணி சமீபமாக ஸ்பின் பௌலிங்கை எதிர்கொள்ள மிகுந்த சிரம படுவது சோகம் அளிக்கிறது.
தரமான சுழற்பந்துவீச்சாளர்களையே பந்தாடிய மட்டையாளர்களை கொண்டிருந்த இந்திய பேட்டிங் வரிசையில் இப்போது முன்னணி வீரர்களே கூட சாதாரணமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளவும் திணறி வருகின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள உலக தர ஸ்பின் பௌலர்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய இங்கிலாந்தின் மொயின் அலி, ஆதில் ரஷீத், பாக்கின் ஷதாப், ஆப்கானிய ரஷீத் கான் மற்றும் ஆஸ்திரேலிய நாதன் லியோன் போன்றோர் மிக மிக சாதாரணமான பௌலர்கள். ஆனால் இவர்களை எதிர்கொள்ளவே நமது பேட்ஸ்மேன்கள் பயந்து நடுங்கி விக்கெட்டுகளை காவு கொடுத்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த இங்கிலாந்து சுற்று பயணத்தில் இந்திய முன்னணி வீரர்கள் இங்கிலாந்தின் மொயின் அலியிடமும் அதில் ரஷீதிடமும் அவர்களின் பந்துகளை கணிக்கவே இயலாது திணறியது கொடுமையின் உச்சம். இந்தியாவிற்கு உடனடி தேவை சுழற்பந்தை சரியான முறையில் எதிர்கொள்ள கற்று தரும் ஒரு சிறந்த கோச். டெஸ்டுகளில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டுமெனில் இந்தியா உடனடியாக கவனித்து செயல்பட வேண்டியது அத்தியாவசிய தேவை இதுவாகிறது.