2019 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு . இந்த அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் ஏழு தோல்விகளை தழுவி உள்ளது. இன்னும் இந்த அணிக்கு 6 லீக் போட்டிகள் உள்ளன. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு சிறந்த பேட்டிங் கூட்டணியை வைத்திருந்தாலும் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவர் மட்டுமே தங்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் உலகின் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னரான் சாஹலை தனது அணியில் கொண்டிருந்தாலும் தோல்விகளையே தழுவி வருகிறது, இந்த அணி. பீல்டிங்கில் மிகவும் மோசமானதாக இருந்து வருகிறது.
பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் சிறந்து விளங்கி வரும் வீரரான விராட் கோலி, தனது அணியை வழி நடத்துவதில் சற்று தடுமாறுகிறார். ஒரு திறமையான கேப்டனின் பங்கு களத்தில் உள்ள அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில், பார்த்தால் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி அற்புதமாகக் செயல்பட்டு வந்திருக்கிறார். அணியில் உள்ள வீரர்கள் யாரேனும் தங்களுக்கு வந்த கேட்சை தவறவிட்டாலும், ஒரு பவுலர் தவறான பந்தை வீசினாலும் சற்று நிதானமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார், சவுரவ் கங்குலி. மகேந்திர சிங் தோனியும் அவ்வாறே தற்போதும் கூட செயல்பட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகருக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியும் நம்பிக்கைகளை அளித்தும் வருகிறார், தோனி.ஆனால், விராட் கோலி இதிலிருந்து சற்று மாறுபடுகிறார்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோஹ்லியின் தலைமையில் இடம் பெற்றிருக்கும் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் ஏன் தடுமாறி வருகிறார்? அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்றிருக்கும் வீரர்களின் மனதை ஆழமாக புரிந்து இருக்க வேண்டும். அது ஒரு கேப்டனின் தலையாய கடமையாகும். ஐபிஎல் தொடருக்கு அப்பாற்பட்டு, சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அணியை வழிநடத்தும் போது சில சமயங்களில், தோனி மற்றும் ரோகித் சர்மாவின் அறிவுரைகளை கேட்டு வருகிறார். இது உலக கோப்பை தொடரிலும் தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் நன்மை பயக்கும். உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தோனி ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இந்திய அணி எவ்வாறு செயல்பட போகும் என்பதில் சற்று சந்தேகம் எழுந்துள்ளது. அணியின் முழுப் பொறுப்பை ஏற்றிருக்கும் விராட் கோலி தொடர்ந்து வெற்றிகளை குவிப்பார் என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்..