இன்று சையத் முஷ்டாக் அலி டிராபியில் இஷான் கிஷான் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இன்று சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. விஜயவாடாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜார்கண்ட், பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஜம்மு-காஷ்மீர் அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஜம்மு-காஷ்மீர் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜம்மு-காஷ்மீர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அப்துல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்பு வந்த வீரர்கள் சற்று நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய மன்சூர் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசி 22 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார்.
அதன்பின்பு ஜம்மு-காஷ்மீர் அணியின் கேப்டன் ரசூல் 13 பந்துகளில் 24 ரன்களை எடுத்தார். இறுதியில் ஜம்மு-காஷ்மீர் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஜார்கண்ட் அணியில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சுக்லா தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜார்கண்ட் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷான் மற்றும் ஆனந்த் சிங் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய ஆனந்த் சிங் 34 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். அதன்ப பின்பு அவர் அரைசதம் அடிப்பதற்குள் அவுட்டாகி வெளியேறிவிட்டார். இறுதிவரை அதிரடியாக விளையாடிய கேப்டன் இஷான் கிஷான் வெறும் 55 பந்துகளில் சதம் விளாசினார். இவர் 7 சிக்சர்களையும், 8 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஜார்கண்ட் அணி 17 ஓவர்களின் முடிவில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை இஷான் கிஷான் மற்றும் விராட் சிங் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜம்மு-காஷ்மீர் அணியின் சார்பில் உமர் நசீர் மட்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
கிஷான் தற்போது வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் சிறப்பாக விளையாடியதால் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராகவும், சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் வலம் வந்தார். அதுவும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில், நமது இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஓவரில், இவர் தொடர்ந்து 4 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் இன்றைய போட்டியில் சதம் விளாசியதால் புது சாதனை ஒன்றை சையத் முஷ்டாக் அலி தொடரில் படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை எந்த விக்கெட் கீப்பரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.