சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில் இனைந்த ரவீந்திர ஜடேஜா 

Jadeja Returns to Chennai Super Kings Training
Jadeja Returns to Chennai Super Kings Training

புள்ளி அட்டவணையில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதன் பிறகு இரண்டு நாட்கள் அந்த அணி பயிற்சியில் ஈடுபடவில்லை. முன்னாள் ஐபிஎல் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

சென்னை அணியின் பேட்டிங் சொதப்பலால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மிட்செல் சான்ட்னர் மற்றும் டுவைன் பிராவோ வெற்றிக்காக முயன்றும் பலனில்லாமலேயே போனது. இந்த போட்டியில் லாசித் மலிங்கா அதிரடியாக பந்துவீச்சை மேற்கொண்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் பேட் செய்த மும்பை அணியில் ரோகித் சர்மாவின் சிறப்பான அரைசதத்தால் 165 ரன்கள் சென்னை அணிக்கு இலக்காக நிரண்யிக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காய்ச்சலிலிருந்து மீண்டு சென்னை அணியின் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறார். தோனி மற்றும் ஜடேஜா இருவரும் காய்ச்சல் காரணமாக மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடவில்லை.

2019 ஐபிஎல் சீசன் ரவீந்திர ஜடேஜாவிற்கு சுமாராகவே இருந்துள்ளது. அனுபவ ஆல்-ரவுண்டர் ஜடேஜா இந்த சீசனில் 11 போட்டிகளில் பங்கேற்று பேட்டிங்கில் 76 ரன்களையும், பௌலிங்கில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இருப்பினும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவருக்கு மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜடேஜா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில் இனைந்தார். ஆனால் எம்.எஸ்.தோனி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர் இந்த சீசனில் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை. அந்த இரு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சென்னை அணி வெற்றிக்காக பெரும்பாலும் தோனியையே நம்பியுள்ளது என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. தோனி ஏற்கனவே முதுகுவலியாலும் அவதிப்பட்டு வருகிறார். எனவே எதிர்வரும் உலகக் கோப்பைக்கு முன்னால் அதிக வேலைப்பளுவை தோனி எடுக்க விரும்பவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டதால் மீதமுள்ள 2 லீக் போட்டிகளில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் விக்கெட் கீப்பர் ஜெகதீஸன் சென்னை அணியின் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று வருகிறார். அத்துடன் சிறந்த விக்கெட் கீப்பிங் திறன் அவரிடம் உள்ளது. எனவே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மே 1 அன்று சிதம்பரம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளும் 16 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

Quick Links