'ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' தொடர் தற்போது நடைபெற்று வருவதால் டெஸ்ட் போட்டிகளும் விறுவிறுப்பாகி வருகின்றன. சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியும், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் மேலும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியும் முடிவடைந்ததை அடுத்து புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.
ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இன்னிங்சை ஆடி இங்கிலாந்து அணியை திரில்லிங் வெற்றி பெற வைத்த 'பென் ஸ்டோக்ஸ்' பேட்டிங் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில் இவர் 13 இடங்கள் ஏற்றம் கண்டு 13-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தர நிலையாகும். இரண்டு வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டியில் 19-வது இடத்தை பிடித்ததே இவரது சிறந்த தர நிலையாக இருந்தது.
மேலும் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 'ஆல்-ரவுண்டர்' வரிசையிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ள 'பென் ஸ்டோக்ஸ்' இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக 44 புள்ளிகளை அதிகம் பெற்று ஆல்-ரவுண்டர் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இவரைவிட 22 புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் 'ஜேசன் ஹோல்டர்' முதலிடத்தில் நீடிக்கிறார்.
பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் 'விராட் கோலி' 910 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் 'ஸ்டீவன் ஸ்மித்', நியூஸிலாந்தின் 'கேன் வில்லியம்சன்' மற்றும் இந்தியாவின் 'சேத்தேஸ்வர் புஜாரா' 2 முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடர்கிறார்கள். கோலி மற்றும் ஸ்மித் இடையேயான புள்ளிகள் வித்தியாசம் 6 ஆக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையை பொருத்தவரையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் 'ஜஸ்பிரித் பும்ரா' அதிரடி முன்னேற்றம் கண்டு முதன்முறையாக 'டாப்-10' இடத்திற்குள் நுழைந்து உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் 9 இடங்கள் முன்னேறி தற்போது 7-வது இடத்தை பிடித்துள்ளார் பும்ரா.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 'பேட் கம்மின்ஸ்' 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் 'ரபாடா' இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 'ஜேம்ஸ் ஆண்டர்சன்' மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் 'ரவீந்திர ஜடேஜா' 10-ஆம் இடத்திற்கும் 'ரவிச்சந்திரன் அஸ்வின்' 13-வது இடத்திற்கும் சரிந்து உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 183 ரன்கள் சேர்த்து ஆட்ட நாயகன் விருது பெற்ற 'அஜிங்கிய ரஹானே' பேட்டிங்கில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் நடந்து முடிந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்தின் 'ஜோ ரூட்', இலங்கையின் 'கருணரத்னே' மற்றும் நியூசிலாந்தின் 'டாம் லேதம்' ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
பந்து வீச்சாளர்களில் சென்ற போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இங்கிலாந்தின் 'ஜோப்ரா ஆர்ச்சர்' கணிசமாக முன்னேற்றம் கண்டு 43-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய 'கேமார் ரோச்' மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு 8-வது இடத்தை பிடித்துள்ளார்.