இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை “ஓரினச் சேர்க்கையாளர்” என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஒருவர் திட்டியுள்ளார். இந்த விவகாரத்தை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து அணி, ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்றது. மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின், முதல் இரண்டு போட்டிகளிலே 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 277 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேமர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விட்டது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய மோயின் அலி 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபார சதத்தால் 366 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 585 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி.

விரைவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டது. எனவே இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட், ரன் எடுக்க ஓடிய போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷானான் கேப்ரியல் , ஜோ ரூட்டை பார்த்து ஓரினச் சேர்க்கையாளர் என்று திட்டியுள்ளார்.
அதற்கு ஜோ ரூட் “ இதுபோன்று இனிமேல் பேசாதீர்கள், ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது” என்று கூறினார். ஜோ ரூட் கூறியது ஸ்டம்பில் உள்ள மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷானான் கேப்ரியல் கூறியது சரியாக மைக்கில் பதிவாகவில்லை. இதை கவனித்த போட்டியின் நடுவர் அந்த பவுலரை எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரத்தை குறித்து ஐசிசி கூறியது என்னவென்றால், ஐசிசி விதிமுறை 2.13ன் கீழ், ஷானான் கேப்ரியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். போட்டியின் நடுவர்களின் புகாரின் பேரில் இவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.