தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கிரிக்கெட் வரலாறு கண்ட ஒரு அற்புதமான பீல்டர். அவர் அற்புதமான கேட்சுகளை பிடிப்பதிலும் அபாரமான ரன் அவுட் செய்வதிலும் கைதேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா ஆடியபோது அந்த அணியின் இன்சமாமை ரன் அவுட் செய்ததன் மூலம் உலகிலுள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் அவர் மேல் படச்செய்தார். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் ஒரு இன்னிங்சில் 7 கேட்ச்களை பிடித்து அப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை வென்றார். ஒரு போட்டியில் பீல்டர் ஆட்டநாயகன் விருது பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தெறிக்க விட்ட ரன் அவுட்கள் ஏராளம். இன்றும் நண்பர்களுடன் நாம் கிரிக்கெட் விளையாடும் பொழுது யாராவது திறமையாக பீல்டிங் செய்தால் அவரை நாம் ஜான்டி ரோட்ஸ் ஒப்பிடுவது வழக்கம். அப்படிப்பட்ட சாதனைகளை பீல்டிங்கில் நிகழ்த்திய அசாத்திய வீரர்,ஜான்டி ரோட்ஸ்.
ஐசிசி உடன் அளித்த பேட்டியில் கிரிக்கெட் உலகில் தான் பார்த்த சிறந்த ஐந்து பீல்டர்களை தெரிவித்தார்.
1. ஆஸ்திரேலிய அணியின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அவர் பார்த்த சிறந்த ஆஸ்திரேலிய பீல்டர். மைதானத்தில் எந்த இடத்தில் அவரைப் போட்டாலும் அவர் சிறப்பான பீல்டிங் செய்வார் என அவர் தெரிவித்தார்.
2. இரண்டாவது தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் கிப்ஸ் பெயரை தெரிவித்தார். அவருடன் ஆடிய காலத்தில் பீல்டிங்கை மிகவும் விரும்பி செய்ததாக அவர் தெரிவித்தார். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 210 கேட்ச்களை பிடித்துள்ளார்.
3. மூன்றாவதாக அவர் தெரிவித்த வீரர் இங்கிலாந்தை சேர்ந்த கோலிங்வுட். ஜான்டி ரோட்ஸ் போன்று இவரும் பாயிண்டில் அபாரமாக பீல்டிங் செய்வார். இவர் இங்கிலாந்து அணிக்காக உலக கோப்பை வென்ற ஒரே கேப்டன்.
4. நான்காவதாக தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பெயரை தெரிவித்தார். தான் தென்னாப்பிரிக்காவுக்கு பயிற்சி செய்த பொழுது டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பிங் செய்வதை இவர் ஒருபோதும் விரும்பியதில்லை. மாறாக அவரை ஒரு பீல்டர் ஆகவே பார்க்க இவர் ஆசைப்பட்டார். ஆனால் அணியின் நலனுக்காக டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் ஏற்று அதனையும் திறம்பட செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. இறுதியாக இந்திய அணியின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பெயரை தெரிவித்தார். இந்தியாவில் புற்கள் குறைந்த மைதானத்தில் பீல்டிங் செய்வது மிகவும் கடினமான ஒரு செயல் ஆகும். ஆனால் அதனை ஏதும் பாராமல் சுரேஷ் ரெய்னா சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்துவார். சுரேஷ் ரெய்னா மேலும் ஸிலிப்பில் அற்புதமான காட்சிகளை பிடித்தார் எனவும் நினைவூட்டினார்.
இவர்களைத் தவிர ரவீந்திர ஜடேஜா, மெக்கல்லம், பாண்டிங் மற்றும் யுவராஜ் சிங் பெயரை இவர் குறிப்பிடாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இது முற்றிலும் அவரின் தனிப்பட்ட கருத்து. ஆகையால் அதை விமர்சிப்பது முற்றிலும் தவறாகும்.