நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை அடைந்தது. இந்தத் தோல்விக்கு பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மட்டும் ரோகித் சர்மா களத்தில் இறங்கினர். தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தவான் மற்றும் ரோகித் சர்மா ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அதன்பின் வந்த கில்லும் வெறும் 7 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது.
இந்த சூழ்நிலையில் அம்பத்தி ராயுடு மற்றும் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். நீண்ட நேரம் விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விஜய்சங்கர் 45 ரன்கள் அடித்த நிலையில், அம்பத்தி ராயுடுவின் தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு அம்பத்தி ராயுடு மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடினர். அதன்பின்பு அம்பத்தி ராயுடு சதம் அடிப்பதற்கு முன்பாகவே 90 ரன்களை அடித்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் கார்த்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய இவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 44ஆவது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 217 ரன்களை மட்டுமே அடித்தது. நியூசிலாந்து அணியின் சார்பாக லதம் மட்டும் 44 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்துவீசிய சகால் 3 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடுவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியின் முடிவிற்குப் பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியது என்னவென்றால், "இந்திய அணி எங்கள் மண்ணிற்கே வந்து ஆதிக்கம் செலுத்தி விட்டது. அவர்கள் மிக சிறப்பாக விளையாடுகின்றனர். இந்திய அணியின் பவுலர்கள் மிகத்துல்லியமாக பந்து வீசுகின்றனர். ஆனால் நாங்கள் தான் தேவையான நேரத்தில் ரன்களை எடுக்க தவறிவிட்டோம். எங்கள் அணியில் சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதுவே எங்களது தோல்விக்கு முக்கிய காரணம்". இவ்வாறு அவர் கூறினார்.