நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்காது – வில்லியம்சன்!!

India Cricket Team
India Cricket Team

நேற்று நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகளை கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Krunal Pandya
Krunal Pandya

நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் முன்ரோ போன்ற பேட்ஸ்மென்களை இழந்தது. நியூசிலாந்து அணி தடுமாறிய நிலையில் ராஸ் டெய்லர் மற்றும் கிராண்ட் ஹோம் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய கிராண்ட் ஹோம் அரை சதம் விளாசி அவுட்டாகி வெளியேறினார். இறுதி வரை தாக்குப் பிடித்த ராஸ் டெய்லரும் 42 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை அடித்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே ரோகித் சர்மா மற்றும் தவான் அதிரடியாக விளையாடினர். அதிரடியாக 4 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா, 28 பந்துகளில் அரைசதத்தை விளாசி அவுட்டாகி வெளியேறினார்.

Rohit Sharma
Rohit Sharma

தொடர்ந்து தவானும் 30 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு ரிஷப் பண்ட் மற்றும் தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை அடித்து, அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் 19 ஓவர்களின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குருணால் பாண்டியாவிற்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்களது தோல்வியை குறித்து கூறியது என்னவென்றால், "இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினம். எங்கள் அணியின் ராஸ் டெய்லர் மற்றும் கிராண்ட் ஹோம் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

Kane Williamson
Kane Williamson

ஆனால் இறுதி நேரத்தில் ரன்கள் தேவைப்படும் பொழுது அவர்கள் அவுட்டாகி வெளியேறி விட்டனர். நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் அடித்து இருந்தால், இந்தியா வெற்றி பெறுவதற்கு சற்று கடினமாக இருந்திருக்கும். நாங்கள் தான் தவறு செய்து விட்டோம். ரன்கள் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விட்டோம். நாளை நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் நாங்கள் அதை சரி செய்து வெற்றி பெற முயற்சி செய்வோம்" என்று கூறினார்.

Quick Links

Edited by Fambeat Tamil