தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களமிறங்க கேதார் ஜாதவ் தயராக உள்ளார் - விராட் கோலி

Kedar jadhav
Kedar jadhav

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா திகழ்கிறது. இந்திய அணி உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை ஜீன் 5 அன்று சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது. தென்னாப்பிரிக்க அணி தான் விளையாடிய முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கிடையில் இந்திய அணிக்கு ஒரு நற்செய்தி அளிக்கும் விதமாக கேதார் ஜாதவ் முழு உடற்தகுதி பெற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக கேப்டன் விராட் கோலி மாலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதிய கடைசி லீக் போட்டியில் கேதார் ஜாதவ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது காயமடைந்தார். பவுண்டரிக்கு சென்று கொண்டிருந்த பந்தை தடுக்க கேதார் ஜாதவ் முற்பட்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனே ஓய்வறைக்கு சென்று விட்டார். அவரது இடது கையை மருத்துவர்கள் ஆராய்ந்தனர். அந்த போட்டியில் 2 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

கேதார் ஜாதவ் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இருப்பினும் கேதார் ஜாதவிற்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் அபாயமானது இல்லை. இந்திய பிசியோதெரபிஸ்ட் அவரை முழுவதுமாக கவணித்து வருகிறார். இந்திய அணியில் உலகக் கோப்பை தொடரில் இனைவார் என்று சொல்லப்பட்டது. இவர் இந்திய அணியுடனேயே இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக வலைபயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் இவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது தற்போது வரை சந்தேகமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் கேதார் ஜாதவ் முழு உடற்தகுதியுடன் உள்ளார், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணித்தேர்வில் இடம்பெற்றுள்ளார் என விராட் கோலி உறுதி செய்துள்ளார்.

விராட் கோலி பத்திரிகையாளர் நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,

"கேதார் ஜாதவ் தனது பழைய உடற்தகுதிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். மீண்டும் இந்திய அணியில் இனைய உள்ளார். ரவீந்திர ஜடேஜா-வும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எங்களுக்கு இரண்டாவது ஆல்-ரவுண்டர் இடத்திற்கு இரு வீரர்கள் அணியில் இடம்பெற ஆவலுடன் உள்ளனர். இரு வீரர்களும் சிறந்த வீரர்களே. இருவருமே அணித்தேவையை நன்கு அறிந்து விளையாடியுள்ளனர்"

இதற்கிடையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் போட்டி கண்டிப்பாக அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் தோல்வியை தழுவி துவண்டு போய் உள்ளது. குறிப்பாக டேல் ஸ்டெய்ன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோரை தென்னாப்பிரிக்க அணி தற்போது இழந்துள்ளது. குறிப்பாக டேல் ஸ்டெய்ன் தோல்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்தே விலகியுள்ளார்.

கேதார் ஜாதவ் தற்போது முழு உடற்தகுதி அடைந்துள்ள காரணத்தால், இந்திய அணியின் இரண்டாவது ஆல்-ரவுண்டர் இடத்தில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறுவாரா அல்லது கேதார் ஜாதவ் இடம்பெறவார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அத்துடன் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பெரும் தலைவலியாகவும் இது அமைந்துள்ளது. கேதார் ஜாதவ் பேட்டிங் சிறப்பாக விளையாடுவார், அத்துடன் பௌலிங்கில் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவார். ஆனால் இவர் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் நேரடியாக உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற உள்ளார்‌. ரவீந்திர ஜடேஜா பயிற்சி ஆட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

Quick Links