நடந்தது என்ன?
இந்திய ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் பங்கேற்ற தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேதார் ஜாதவின் ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இந்திய ஓடிஐ அணியில் கேதார் ஜாதவ் ஒரு முக்கிய வீரர் ஆவார்.
உங்களுக்கு தெரியுமா...
2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் போட்டியில் கேதார் ஜாதவிற்கு தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை கேதார் ஜாதவ் இழந்தார். அத்துடன் உலகக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பதும் சந்தேகமாக இருந்தது.
கதைக்கரு
"டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகையில் வெளிவந்த தகவலின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணர் பேட்ரித் ஃபார்ஹார்ட் வலதுகை பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் முழு உடற்தகுதி அடைந்து உலகக் கோப்பையில் விளையாட தயாராக உள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு ஆய்வறிக்கை சமர்பித்துள்ளார். உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து ஃபிட்டாக உள்ளார் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். மே 22 இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணியுடன் கேதார் ஜாதவும் பயணிக்க உள்ளார்.
கேதார் ஜாதவ் இந்திய அணியில் ஒரு முக்கிய வீரர். பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தன் பங்களிப்பை இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் அளித்து வருகிறார். இக்கட்டான சூழ்நிலையில் அணியின் தேவையறிந்து அந்த இடத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்பவர் கேதார் ஜாதவ். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேலாக உள்ளது. மிடில் ஆர்டரில் இவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேதார் ஜாதவ் பேட்டிங்கை காட்டிலும் பௌலிங்கில் சிறப்பாக அசத்துவார். இவர் மிடில் ஓவரில் ரன்களை கட்டுபடுத்துவதிலும், விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் வல்லவர் கேதார் ஜாதவ். இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு பல முறை உபயோகமாக இருந்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் விராட் கோலி, கேதார் ஜாதவை 6வது பௌலராக பயன்படுத்துவார்.
ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை எனினும், கடந்த கால ஒருநாள் தொடர்களில் கேதார் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக இந்திய ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் ஒரு முக்கிய வீரராக வலம் வருகிறார். இந்திய அணியில் கேதார் ஜாதவை சரியான இடங்களில் உபயோகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார் ஜாதவ் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் எனவும் நம்பப்படுகிறது.
அடுத்தது என்ன?
கேதார் ஜாதவ் இவ்வருடத்தில் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரில் சிறப்பான பங்களிப்பை பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் வெளிபடுத்தினார்.
இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் ஜீன் 5 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் கேதார் ஜாதவின் சிறப்பான ஆட்டத்திறனை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.