தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ‘சர்ச்சைக்குரிய’ ஒரு அணியாக கருதப்படுகிற ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி தற்போது மேலும் ஒரு பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்படலாம் என தெரிகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்திலேயே பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘பட்ட காலிலே படும்’ என்பதற்கேற்ப தற்போது பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் தான் ‘நெஸ் வாடியா’ (வயது : 47) தொழிலதிபரான இவர் கடந்த மாதம் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஜப்பான் நாட்டுக்கு சென்ற பொழுது அங்கு போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் விதிமுறையில் பிரிவு 14, உட்பிரிவு-2 இன் படி, ஒரு அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என யாரும் அணிக்கோ, தொடருக்கோ அல்லது பிசிசிஐ அமைப்புக்கோ அவப்பெயர் ஏற்படுவது போல செயல்படுவது குற்றமாகும்.
இதற்கு உதாரணமாக ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ மற்றும் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிகளை குறிப்பிடலாம். இந்த அணிகளின் உரிமையாளர்களான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அதேபோல ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணிக்கு தடை விதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் விதிகளின்படி இந்த விவகாரம் முதலில் விசாரணை ஆணையத்திற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் பிசிசிஐ குறை தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும்.
இது குறித்து பிசிசிஐ தரப்பில் ஒரு முக்கிய அதிகாரி கூறுகையில், “சூதாட்டத்தில் அணி நிர்வாகிகள் ஈடுபட்டதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எந்த மாதிரியான தண்டனை கிடைத்ததோ அதே போலதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ‘நெஸ் வாடியா’வுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சஸ்பெண்ட் அல்லது தடை செய்யப்படலாம்” எனக் கூறினார்.
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அடுத்து நடைபெற உள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது.
இந்நிலையில் இது போன்ற பிரச்சனையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிக்கி இருப்பதால் அது அவர்களின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினையில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.