கிங்ஸ் XI பஞ்சாப் 2019 ஐபிஎல் தொடரின் மிடில் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. இருப்பினும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறவில்லை. இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக திகழ்ந்தனர். பஞ்சாப் அணிக்கு இவர்களது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் சிறப்பாகவே இருந்தது.
2019 ஐபிஎல் தொடரில் புள்ளி அட்டவனையில் 6 வது இடத்தை பெற்று இந்த சீசனை பஞ்சாப் அணி முடித்துள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிறப்பான சேஸிங்கை செய்து கிங்ஸ் XI பஞ்சாப் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஐ.எஸ்.பிந்ரா மைதானத்தில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஃபேப் டுயுபிளஸ்ஸி சிறப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்தார். ஹர்பஜன் சிங் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் 41 ரன்களை குவித்து இந்த ஐபிஎல் சீசனில் மூன்றாவது அதிவேக அரைசதத்தை விளாசினார்.
சேஸிங்கில் கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஜோடி முதல் விக்கெட்டிற்குற்கு 108 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய நிக்கலஸ் பூரான் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தனது தொடக்க பார்டனரான கே.எல்.ராகுலை புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒரு சிறந்த தொடக்க பேட்ஸ்மேனுடன் களமிறங்குவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். விராட் கோலிக்கு பிறகு கே.எல். ராகுல் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக தற்போது திகழ்கிறார் என சமீபத்தில் கிறிஸ் கெய்ல் தெரிவித்திருந்தார்.
"கே.எல்.ராகுல் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறந்த ஓபனிங் பார்டனர். பேட்டிங் செய்யும் போது எங்களுக்கு இடையே அருமையான புரிதல் உணர்வு உள்ளது."
இதனை கிறிஸ் கெய்ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்த பின் கே.எல்.ராகுலிடம் தெரிவித்தார்.
கே.எல்.ராகுல் 2019 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று 135.38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன், 53.90 சராசரியுடனும் 593 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு சதத்தை குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல் இந்த சீசனில் 13 போட்டிகளில் பங்கேற்று 130 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 40.83 சராசரியுடன் 490 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் இவர்கள் இருவரும் இரண்டு முறை 100+ பார்டனர்ஷீப் செய்து விளையாடியுள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு கெயில் மற்றும் கே.எல்.ராகுல் அந்த அணிக்கு ஒரு முக்கிய புள்ளிகளாக திகழ்ந்தனர்.