நடந்தது என்ன?
தனியார் தொலைக்காட்சியில் பெண்களை பற்றி தவறாக பேசிய சர்ச்சையில் சிக்கிய கே.எல்.ராகுல் சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. பிறகு உள்ளுர் கிரிக்கெட்டில் நன்றாக ஆட்டத்திறனை வெளிபடுத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் ராகுல். இந்த தொடருக்கு பின் செய்தியாளர்களிடம் முதன்முதலாக பேசிய அவர், "என்னுடைய கடினமான காலங்களில் எனக்கு பக்கபலமாக இருந்து என்னை சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்த காரணமாக இருந்தவர் ராகுல் டிராவிட். அவரது உதவியினால் தான் நான் சர்வதேச போட்டிகளில் மீண்டும் சரியான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடிந்தது" என்றார்.
பிண்ணனி:
கடந்த இரு மாதங்களாகவே கே.எல்.ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. முதலாவது, அந்நிய மண்ணில் அவரது மோசமான ஆட்டத்திறன் மற்றும் இரண்டாவது, தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சையில் சிக்கியது.
பாலியல் ரீதியாக பேசி சர்ச்சையில் சிக்கியதால் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருமே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டு நியூசிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்டனர். அதன்பின் தடை நீக்கப்பட்டு கே.எல்.ராகுல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய-ஏ அணியிலும், ஹர்திக் பாண்டியா இந்திய தேசிய அணியில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.
கதைக்கரு
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. இத்தொடரில் நடந்த நல்லது என்னவென்றால் கே.எல்.ராகுல் தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் இந்த தொடரில் வெளிபடுத்தியதுதான். இரண்டாவது டி20 முடிவில், இந்த தொடரின் இந்திய அணியின் சார்பாக அதிக ரன்கள் விளாசிய கே.எல்.ராகுல் கூறியதாவது, "இது ஒரு கடுமையான காலம் என்பதில் சந்தேகமில்லை, அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் இது ஒரு மோசமான காலமாகும். நான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு மிகவும் பெருமை படுகிறேன். இந்திய அணியில் நான் இழந்த இடத்த்தை மீண்டும் பிடித்துள்ளேன்".
"இந்திய-ஏ அணியில் விளையாடிய போது ராகுல் டிராவிட் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை எனக்கு தெரிவித்தார். இந்திய-ஏ அணியில் விளையாடிய 5 போட்டிகளிலுமே ராகுல் டிராவிட் என்னுடைய பேட்டிங்கை மேம்படுத்த உதவினார். மிடில் ஆர்டரில் நான் எனது ஆட்டத்தை மிகவும் மேம்படுத்தியுள்ளேன். இந்திய அணிக்கு திரும்பியுள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
தற்போது பழைய ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்துள்ள கே.எல்.ராகுல் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடவில்லை, ஏனெனில் தனியார் தொலைக்காட்சி நிகழ்வுதான் காரணம். இதனை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது: "அந்த நிகழ்வு எனது வாழ்வில் ஒரு மோசமான காலம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தற்போது எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் சர்வதேச அணியில் இனைந்துள்ளேன். அனைவருக்குமே தனது தாய்நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது ஒரு கனவாகும், இதில் நான் மட்டும் விதிவிலக்கு இல்லை. தற்போது எனது முழு கவனம் கிரிக்கெட்டில்தான் உள்ளது. இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வாயப்பை நானே உருவாக்கப்போகிறேன்" என்று கூறியுள்ளார்.
அடுத்தது என்ன?
சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சொதப்பிய கே.எல்.ராகுல் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியுடன் தனது சொந்த மண்ணில் தனது திறமையை நிருபித்துள்ளார். எதிர்வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரது ஆட்டத்திறனை பொறுத்து உலகக் கோப்பை இந்திய அணியில் இவரது இடம் முடிவு செய்யப்படும்.
ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் இவரது சிறப்பான ஆட்டத்திறன் தொடர்ந்தால் உலகக் கோப்பை அணியில் மாற்று தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது மிடில் ஆர்டரிலோ களமிறக்கப்படுவார்.