ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது அனைவரின் கவனமும் 2019 உலகக் கோப்பை மீது திரும்பியுள்ளது. மிகவும் சுவாரசியமாக இருந்த 2019 ஐபிஎல் தொடரை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலகக் கோப்பை தொடங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது இந்திய அணியை விராட் கோலி-யால் சரியாக நிர்வகிக்க முடியுமா என அனைவரது மனதிலும் கேள்வி எழுந்துள்ளது. இவ்வருட ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் மோசமாக அந்த அணியை வழிநடத்தினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் ரோகித் சர்மா மற்றும் தோனியை இந்திய கேப்டன் விராட் கோலி-யுடன் ஒப்பிட கூடாது என தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா 4 ஐபிஎல் கோப்பைகளையும், தோனி 3 ஐபிஎல் கோப்பைகளையும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் கைப்பற்றியுள்ளனர். 2016 ஐபிஎல் தொடரில் மட்டுமே விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எம்.எஸ் தோனி ஆரம்பம் முதலே ஐபிஎல் வரலாற்றில் கேப்டன் ஷீப்பில் ஆதிக்கம் செலுத்தினார். ரோகித் சர்மா படிப்படியாக வளர்ந்து தற்போது கேப்டன் ஷீப்பில் அற்புதமாக திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் சர்மா சிறப்பாக வழிநடத்தி முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் அணிக்கு எதிராக சிறப்பான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய இந்திய கேப்டனுக்கு பதிலாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என கௌதம் காம்பீர் கூறியுள்ளார்.
கௌதம் காம்பீர் தனியார் கிரிக்கெட் வலைதளத்திற்கு தெரிவித்ததாவது:
" ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்க முழு தகுதியும் உள்ளது என நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் இவர் 4 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டனாக திகழ்கிறார். ஆசியக் கோப்பையில் இவரது தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. எனவே விராட் கோலி-க்கு சிறந்த மாற்று கேப்டனாக இவர் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ரோகித் சர்மா மற்றும் தோனியை இந்திய கேப்டன் விராட் கோலி-யுடன் ஒப்பிட வேண்டாம். ரோகித் 4முறையும் தோனி 3 முறையும் ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர். கோலி ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றது இல்லை. எனவே கேப்டன் ஷீப்பில் ரோகித் அல்லது தோனியை கோலியுடன் ஒப்பிட வேண்டாம்".
மேலும் காம்பீர் தெரிவித்ததாவது: ரோகித் சர்மாவிற்கு உள்ள கேப்டன் ஷீப் திறனை விட விராட் கோலி-க்கு குறைவாகவே உள்ளது. ரோகித் மற்றும் தோனி இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இவர்கள் மூவரும் இணைந்து இந்திய அணிக்கு மூன்றாவது உலகக் கோப்பையை பெற்றுத் தருவார்கள் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று சந்திக்க உள்ளது.