இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி 2008ஆம் ஆண்டு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் தான் அறிமுகமானார். கோலியை மூன்றாவது வரிசையில் இறக்கி அழகு பார்த்தார் தோனி. தோனி தன் மேல் வைத்த நம்பிக்கையை வீணாக்காமல் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் கோலி. அதற்காகவே தான் தோனிக்கு நன்றிகடன் பட்டுள்ளதாக கோலி கூறியுள்ளார். ஒரு சில இளம் வீரர்களுக்கே இதை போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறினார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய உயரங்களை பெற்று வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் வரிசையில் இறங்கி ரன் வேட்டை நடத்தி வருகிறார். அவருடைய சாதனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. சில சமயங்களில் அவர் மனிதரா இல்லை வேற்று கிரக வாசியா என்று யோசிக்க வைக்கும் அளவு அவரது சாதனைகள் இருக்கின்றன. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே 29இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்குகின்றன. இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விராட் கோலி முன்னாள் கேப்டன் தோனி மீது பாராட்டு மழையை பொழிந்துள்ளார்.
அவர் கூறியதாவது :
எனக்கு தெரிந்த வரை தோனி ஒருவர் தான் ஆட்டம் எப்படிச் செல்கிறது என்று முதல் பந்தில் இருந்து 300வது பந்து வரை சரியாக கணித்து வருகிறார். எனக்கும் தோனிக்கும் இடையில் நல்ல புரிதல் மற்றும் நம்பிக்கை உள்ளது. அவரின் கணிக்கும் தன்மை தான் எனக்கு உதவுகிறது. தோனி விக்கெட் கீப்பராக இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அன்றைய ஆட்டம் குறித்து தோனி, ரோகித் மற்றும் அணி நிர்வாகத்திடம் ஆலோசனை செய்வேன். 30-35 ஓவர்களுக்கு பின் நான் எல்லைக்கோட்டுக்கு பக்கத்தில் பீல்டிங் செய்து கொண்டிருப்பேன். அப்போது ஆட்டோ மோட் செயல்பட துவங்கி இருக்கும். அப்போது பீல்டிங் கோணங்கள் மற்றும் ஆடுகளத்தின் வேகத்தன்மையை பொறுத்து பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மாற்றங்களை தோனி செய்வார். அவருக்கும் எனக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நல்ல மரியாதை உள்ளது. அவரை நிறைய பேர் அவரை விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டமானது.
எனக்கு ஆரம்ப கட்டங்களில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டாலும் தோனி போன்ற ஒருவரின் ஆதரவு கிடைத்தது முக்கியமான ஒன்றாகும். அவர் எனக்கு மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளித்தார். இந்த மாதிரி வாய்ப்புகள் இளம் வீரர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. இவ்வாறு விராட் கோலி கூறினார். இந்திய அணி தனது முதல் உலககோப்பை லீக் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை சவுத்தாம்டனில் எதிர்கொள்கிறது. இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அன்று தான் தனது உலககோப்பை அணியை அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான அணியில் கேஎல் ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.