கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், இக்கட்டான சூழ்நிலையில் அணியை வழிநடத்தி தனது அரை சதத்தினால் வெற்றியை தேடித்தந்த கோலி, ஒரு சிறந்த வீரராக மட்டுமல்ல, சிறந்த வருவாய் ஈட்டும் வீரராகவும் உள்ளார்.
இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் உச்சத்தில் இருப்பவர் கோலி. நொறுக்குத்தீனியிலிருந்து ஆடி கார் வரை பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக விராட் கோலி செயல்படுகிறார். தனிப்பட்ட விதத்தில் விளையாட்டு சாரா விமர்சனங்கள் இவர் மீது இருந்தாலும், பெருவாரியான டாப் நிறுவனங்கள் விராட் கோலியை வைத்து எப்படியாவது ஒரு விளம்பரம் எடுத்துவிட வேண்டும் என்று கோடிகளை செலவு செய்கின்றனர்.
கோலி தற்போது 21 முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக விளங்குகிறார். அதில் பூமா, ஆடி, டிஸ்ஸாட், உபேர் போன்ற நட்சத்திர நிறுவனங்களும் அடங்கும். இந்த ஆண்டு forbes ஆங்கில பத்திரிகை வெளியிட்ட உலகில் டாப் 100 சம்பாத்தியம் பெரும் வீரர்களின் பட்டியலில் கோலி 83 வது இடத்தில் உள்ளார். இவரது வருவாயின் மதிப்பு (ஆண்டு ஒன்றுக்கு) 24 மில்லியன் டாலராகும்.
இந்தியாவிலிருந்து கிரிக்கெட் வீரரான (உலக அளவில் ஒரே கிரிக்கெட் வீரர்) கோலி மட்டுமே இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பிரபல டென்னிஸ் நட்சத்திரங்களான நோவக் ஜோகோவிக், செர்ஜியோ அகுரோரோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி அந்த ஆண்டிற்கான forbes பட்டியலில் 23-ஆம் இடத்தை பிடித்திருந்தார். அவரின் வருவாய் மதிப்பு 31 மில்லியன் டாலராக இருந்தது. இதுவே கிரிக்கெட் விளையாட்டிற்கான தனிநபர் வீரரின் அதிகபட்ச வருவாயாக இருந்து வருகிறது.
எனவே, அடுத்த ஆண்டு தோனியின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கிரிக்கெட் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும் கோலி பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், அவர்களின் நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதன்மூலம் கோலி, அடுத்த ஆண்டு தோனியின் அதிகபட்ச வருவாயை தாண்டி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கோலி. பாலிவுட்டும் கிரிக்கெட்டும் இணையும் தருவாயில் அமைந்த இந்த ஜோடி பலதரப்பட்ட மக்களால் விரும்பக்கூடிய ஜோடியாக திகழ்கின்றனர். எனவே பல நிறுவனங்கள் விளம்பர தூதர்களாக இருவரையும் ஒப்பந்தம் செய்கின்றனர். இருவரும் ஜோடியாக பல விளம்பரங்களில் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக, கோலி பிரத்தியேக ஷூ ஒன்றை பிரபல தனியார் நிறுவனத்திற்கு தானே வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
இவரின் ஒப்பந்தம் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பாக HOOPER HQ வெளியிட்ட இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களின் மூலமாக அதிக லாபம் ஈட்டும் நபர்களின் தரவரிசை பட்டியலில், விராட் கோலி 17-ஆவது இடத்தை பிடித்திருந்தார். இவரின் ஒரு பதிவுக்கு சுமார் 84 லட்சம் வரை வாங்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் பதிவிட்டிருந்தது.
கோலியை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் ஏராளம். 37 மில்லியன் பாலோவர்ஸ் பேஸ்புக்கிலும், 25 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமிலும், 27 மில்லியன் பாலோவர்ஸ் ட்விட்டரிலும் இருக்கின்றனர். இதனாலேயே பல நிறுவனங்கள் இவரை நாடிய வண்ணம் உள்ளனர்.
என்னவாக இருந்தாலும், கோலியின் ஆட்டத்திறன் காரணமாகவே இவ்வளவு புகழும், வருவாயும் கிட்டுகிறது. பணம் பார்த்து மயங்கும் காலத்தில் கோலி சாயாமல் தனது ஆட்டத்தை மென்மேலும் வளர்த்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.