அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தற்போது சிறந்து விளங்கி வருபவர் இந்தியாவின் விராட் கோலி. கடந்த சில வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.சர்வதேச போட்டிகள் மட்டுமல்லாது ஐபிஎல் போட்டிகளிலும் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி அற்புதமான பற்பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே, 2019 ஐபிஎல் சீசனின் போட்டிகள் அடுத்த மாதம் 23ஆம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டியிலேயே விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடருக்குப்பின் குறுகிய கால இடைவெளியிக்கு பின்னர் உலக கோப்பை திருவிழா தொடங்க உள்ளது. 2018-ஆம் ஆண்டு விராட் கோலிக்கு ஒரு வெற்றிகரமான ஐபிஎல் சீசனாக அமையாவிட்டாலும், தற்போது ஒவ்வொரு எதிரணியினரும் அவரிடம் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்வர்.
மேலும், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி படைக்க வாய்ப்பு உள்ள மூன்று சாதனைகளைப் பற்றி காணலாம்.
#1. ஒட்டுமொத்த ஐபிஎல்-லின் அதிக ரன்கள்:
கடந்த இரு சீசன்களாக, விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை மாறிமாறி படைத்து வருகின்றனர்.கடந்த சீசனில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.ஆனால், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதலாக இரு போட்டிகள் பிளே ஆப் சுற்றின் மூலம் கிடைத்தது. இதன் முடிவில், மொத்தம் 176 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 4985 ரன்களைக் கொண்டு தற்போது முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக, விராட் கோலி 163 போட்டிகளில் 4948 ரன்களோடு இரண்டாம் இடம் வகிக்கிறார்.
இந்தாண்டு நடைபெறப்போகும் ஐபிஎல் சீசனில் இந்த இரு வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.இன்னும் 15 ரன்கள் மட்டுமே குவித்தால் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைப்பார், சுரேஷ்ரெய்னா. ஆனால், அவருக்கு பதிலாக விராட் கோலி படைப்பார் என்பதில் கோலி ரசிகர்களிடையே சற்று ஆர்வம் அதிகரித்து வருகிறது.
#2. ஐபிஎல்-லில் அதிக 50+ ஸ்கோர்கள்:
ஐபிஎல் தொடர் தோன்றிய காலம் முதலே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், விராட் கோலி. அதுவும் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், 973 ரன்களை குவித்தது மட்டும் அல்லாது, 4 சதங்களையும் அடித்து சாதனை படைத்துள்ளார், விராட் கோலி. கடந்த இரு வருடங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் முறையே 308 மற்றும் 530 ரன்களை குவித்துள்ளார். இவரது பத்து வருட கால ஐபிஎல் வாழ்க்கையில், 34 அரைசதங்கள் மற்றும் 4 சதங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 38 50+ ரன்களை குவித்துள்ளார்.
தற்போது, இந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 36 மற்றும் 3 சதங்கள் உள்பட மொத்தம் 39 50+ ஸ்கோர்களோடு முன்னிலை வகிக்கிறார்.இவருக்கும் விராட் கோலிக்கும் இடையே வெறும் ஒரே ஒரு 50+ ஸ்கோர் தான் வித்தியாசம். ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் களம் இறங்கப் போகும் வார்னருக்கும் விராட் கோலிக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும்.
#3. ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள்:
டி20 போன்ற குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது கடினமான ஒன்றாக கருதிய காலம் மலையேறி விட்டது என்றே கூறலாம். ஏனெனில், இன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராஃபியின் லீக் போட்டியில் இந்திய டெஸ்ட் வீரர் புஜாராவே சதம் அடித்து டி20 போட்டிகளில் எளிதாக சதமடிக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 52 சதங்கள் அரங்கேறியுள்ளன. அவற்றில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 6 சதங்களோடு முதலிடத்தில் உள்ளார். அவர்கள் அடுத்தபடியாக, விராட் கோலி 4 சதங்களோடு இரண்டாமிடம் வகிக்கிறார்.
இன்னும் இரு சதங்களை அடித்தால், கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்வார், விராட் கோலி. 2016-ஆம் ஆண்டுக்கு முன்னர், எந்த ஒரு ஐபிஎல் சதமும் அடித்திடாத விராட் கோலி, அதே ஆண்டில் 4 சதங்களை தொடர்ச்சியாக அடித்து அனைவரையும் மிரட்டினார். அதேபோல், இந்த ஆண்டும் தொடர்ச்சியான சதங்களை அடித்து கெயிலின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
எழுத்து: ப்ரோக்கன் கிரிக்கெட்
மொழியாக்கம்: சே.கலைவாணன்