உலகின் மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்றான இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் நேற்று இரவு கோலாகலமாக சென்னையில் தொடங்கியது.விறுவிறுப்பான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடரானது கிரிக்கெட் உலகின் உள்ளூர் நாயகர்களுக்கும் உலக ஜாம்பவான்களுக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்ள விளங்கும் ஒரு பாலம் ஆகும்.எவ்வித சந்தேகமின்றி அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏறக்குறைய ஒன்றரை மாதகாலம் தொடர்ந்து விருந்தளிக்க போகிறது.
இந்த ஐபிஎல் தொடரில், அட்டகாசமான பவுண்டரிகள், அனல் பறக்கும் சிக்ஸர்கள் என பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவிப்பவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆரஞ்சு நிற தொப்பியும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி வருகிறது, ஐபிஎல் நிர்வாகம். அவ்வாறு, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி சென்றார். அதேபோல, இந்த ஆண்டு நடைபெறுகின்ற ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் மூன்று சிறந்த உலக கிரிக்கெட் ஜாம்பவான்களை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
#3.கிறிஸ் கெய்ல்:
இந்த உலகில் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனைக்கு பெயர் போனவர், கிறிஸ் கெய்ல்.ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் தனக்கென ரசிகர் பட்டாளமே வைத்துள்ள வீரர்களில் ஒருவர் ஜமைக்காவை சேர்ந்த கிறிஸ் கெய்ல். தனது அரக்கத்தனமான சிக்ஸர்களால் ஐபிஎல் போட்டிகளில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் (175*) குவித்த வீரர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது. இந்த சாதனையை 2013-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 175 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்து கிரிக்கெட் உலகை மிரள செய்தார். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை 292 அடித்த வீரர் என்ற சாதனையையும் இவரே நிகழ்த்தியுள்ளார்.
இதுமட்டுல்லாது, இவர் இருமுறை ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றி உள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 368 ரன்களையும் குவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்ற இவர், மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த வருடம் தனது மூன்றாவது ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கலாம்.
#2.ஏபி டிவில்லியர்ஸ்:
கடந்த ஆண்டு மே மாதம் எவரும் எதிர்பாராதவிதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், டிவில்லியர்ஸ். இருப்பினும், உலகம் முழுவதும் நடைபெரும் டி20 தொடர்களில் தொடர்ந்து பங்கேற்று தனது பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து பெங்களூர் அணிக்காக களம் இறங்கி வரும் இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
2009, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை அடித்த முதல் ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர். மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் டென் வீரர்களில் இவரும் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் தனது அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல, இந்த ஐபிஎல் தொடர்களிலும் தனது பேட்டிங் நிலைப்பாட்டை தொடர்ந்து நீடித்தால் முதல்முறையாக ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார்.
#1.விராட் கோலி :
அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ஐபிஎல் தொடரிலும் தனது அபார சாதனையை நிகழ்த்த தவறவில்லை, விராட் கோலி. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக இடம்பெற்றுவரும் ஒரு வீரர் விராட் கோலி. சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை இவர் வசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4 சதங்களை அடித்து ஒரே தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், அந்த தொடரில் 973 ரன்களை குவித்து குவித்து ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார்.
2011,13 மற்றும் 15-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களைக் குவித்த முதல் ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர். ஐபிஎல் தொடருக்கு பின்னர், உலக கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் உள்ள நிலையில் இந்த சீசனில் இவருக்கு பணிச்சுமை காரணமாக சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தனது அயராத திறமையால் அதிக ரன்களைக் குவித்து இரண்டாவது முறையாக ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.