ஐபிஎல் தொடரானது இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களுக்கு பஞ்சமிருக்காது. இவ்வாறு அதிக மீட்டர் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலை பற்றி இங்கு காண்போம்.
#1) அல்பி மோர்கல் ( 125 மீட்டர் சிக்ஸ் )
இவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதினர். அந்தப் போட்டியில் பிரகயன் ஓஜா வீசிய ஓவரில், அல்பி மோர்க்கல் 125 மீட்டரில் மிகப்பெரிய சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக மீட்டர் சிக்ஸர் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
#2) ஆடம் கில்கிறிஸ்ட் ( 122 மீட்டர் சிக்ஸ் )
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தார் கில் கிறிஸ்ட். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். அந்த போட்டியில் ஆடம் கில் கிறிஸ்ட், மிட் விக்கெட் திசையில் 122 மீட்டரில் மிகப்பெரிய சிக்ஸரை விளாசினார்.
#3) ராபின் உத்தப்பா ( 120 மீட்டர் சிக்ஸ் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா. இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். அந்த போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சாளரான டுவைன் பிராவோ வீசிய பந்தை, லாங் ஆன் திசையில் 120 மீட்டரில் சிக்ஸரை பறக்கவிட்டார் ராபின் உத்தப்பா.
#4) யுவராஜ் சிங் ( 119 மீட்டர் சிக்ஸ் )
யுவராஜ் சிங், சர்வதேச டி20 போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வந்தார் யுவராஜ் சிங். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதினர். அந்த போட்டியில் அல்பி மோர்கல் வீசிய ஓவரில், யுவராஜ் சிங் 119 மீட்டரில் சிக்ஸர் விளாசினார்.
#5) மகேந்திர சிங் தோனி ( 112 மீட்டர் சிக்ஸ் )
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கண்ட ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினர். அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பிராங்க்ளின் வீசிய பந்தை, லாங் ஆன் திசையில் 112 மீட்டரில் சிக்ஸரை பறக்கவிட்டார் மகேந்திர சிங் தோனி.