T20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனுக்கு ஸ்ட்ரைக் ரேட் மிக முக்கியமாக கருதப்படுகிறது. குறைந்த பட்சம் 125க்கு மேலாக ஸ்ட்ரைக் ரேட் இருந்தால் மட்டுமே பெரும்பாலான அணிகள் அந்த வீரரை ஏலத்தில் வாங்க முன் வருவார்கள். 100க்கு கீழ் வைத்திருப்பவர்களை பெரிய பொருட்டாக கணக்கிட்டு கொள்வதில்லை. எந்த சூழ்நிலையில் அவர் அந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தாலும் சரி.
ஆனால் சில நேரங்களில் அப்படி பொறுமையாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்தவரும் உண்டு. அப்படி ஒரு தருணத்தை இத்தொகுப்பில் காணலாம். ஹனுமா விஹாரி, தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் புதிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் தனது முதல் ஐபிஎல் போட்டியை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி 2013ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடினார். டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணியை பொறுத்த வரை கோஹ்லி, கெய்ல், தில்ஷான் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அடங்கிய பேட்டிங் வரிசை. தனது முதல் ஐபிஎல் போட்டியில் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசும் வாய்ப்பு விஹாரிக்கு வழங்கப்பட்டது. யாரும் எதிர்பார்காத விதமாக முதல் பந்திலேயே கெய்லை கோல்டன் டக் ஆக்கினார்.
அந்த ஒரு ஓவருக்கு பிறகு விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டதால் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் எடுத்து. பின்பு ஆட்டத்தை தொடங்கிய ஹைதெராபாத் அணிக்கு தொடக்கமே இடியாக அமைந்தது. 2வது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் பார்திவ் படேல். 19 வயதான விஹாரி 3வது வீரராக களமிறக்கப்பட்டார். 20/2 என்ற நிலையில் விஹாரியும் ஹைதெராபாத் கேப்டன் சங்கக்கராவும் ஜோடி சேர்ந்து மெல்ல அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 16 ரன்களுக்கு ஆட்டமிழந்த சங்கக்கராவை தொடர்ந்து பின் வந்த பெரேரா, மிஷ்ரா என அனைவரும் பெவில்லியன் திரும்பினர். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார் விஹாரி.
ஆட்டத்தை இறுதி ஓவர் வரை இழுத்துச்சென்றனர் விஹாரியும், ரெட்டியும். இறுதி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார் அக்சத் ரெட்டி. 5 பந்துகளில் 7 ரன்கள் தேவை என ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. அடுத்து வந்த தென்னாபிரிக்க வீரர் ஸ்டெய்ன் ஓவரின் 2வது பந்தில் 2 ரன்னும், 3வது பந்தில் 0 மற்றும் நான்காம் பந்தில் ஒரு ரன்னும் எடுத்து விஹாரிக்கு வாய்ப்பு வழங்கினார். 2 பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆட்டம் சமமாகி சூப்பர் ஓவர் சென்றது. இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி வென்றது. 46 பந்துகளில் 44 ரன்களும், முதல் போட்டியின் முதல் பந்திலே கெய்ல் போன்ற வீரரின் விக்கெட்டை எடுத்ததற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஒரு T20 போட்டியில் இது போன்ற நிகழ்வு மிக மிக அரிது.