நடந்தது என்ன ?
2019 ஐபிஎல் தொடர் ஆரமிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரீஜ் நோர்டிச் ஆகிய இருவரும் காயம் காரணமாக 2019 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு தெரியுமா ?
சமீபத்தில் கொல்கத்தா அணியின் இந்திய இளம் உள்ளுர் வேகப்பந்து வீச்சாளர்கள் சிவம் மாவி மற்றும் கம்லேஷ் நாகர்கோட்டி ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர். அவர்களுக்கு மாற்று வீரராக கே.சி. கரியப்பா மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோரை அந்த அணி சேர்த்தது. அன்ரீஜ் நோர்டிச்-ற்கு தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் 7 வாரங்களுக்கு மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். வெளிநாட்டு வீரர் ஒருவர் விலகியுள்ளதால் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஐபிஎல் ஏலத்தில் அன்ரீஜ் நோர்டிச் 20 இலட்சத்திற்கு எடுக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த தொடரில் அசத்திய தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லுங்கி நிகிடி 2019 ஐபிஎல் தொடரில் சென்னை அணியால் தக்க வைக்கப்பட்டிருந்தார். காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த இவர் தற்போது காயத்திலிருந்து மீள முடியாததால் 2019 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இவரது அற்புதமான ஆட்டத்தால் இந்த வருட ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டிருந்தார். இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது சென்னை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
கதைக்கரு
வலதுகை தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான அன்ரீஜ் நோர்டிச் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 போட்டிகளில் பங்கேற்று 4.7 எகானமி ரேட்-டுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே ஆட்டத்திறன் ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
இதேபோல் லுங்கி நிகிடி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று 17.12 சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடி இலங்கை பேட்ஸ்மேன்களை தனது வேகத்தில் வீழ்த்திய இவர் காலில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விளக்கியுள்ளார்.
அடுத்தது என்ன?
இந்த இரு தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதால் இரு அணிகளும் மாற்று வேகப்பந்து வீச்சாளரை தேடும் பணியில் இறங்கியுள்ளது. ஆனால் இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஏற்கனவே இரு அணிகளும் தங்களது பயிற்சி ஆட்டங்களை கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கி விட்டதால் மாற்று வெளிநாட்டு பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் சிக்கலான விஷயமாகும் .