ரஞ்சிப் போட்டியில் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதிய போட்டியில் மத்திய பிரதேச அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் 6 வீரர்கள் ‘டக் அவுட்’ ஆகி, பரிதாப தோல்வி அடைந்தனர். அது குறித்த விவரங்களை இங்கு காண்போம்.
இந்தியாவில் தற்போது ஒன்பதாவது சுற்று ரஞ்சி போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் இந்தூரில் நடந்த போட்டியில் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின.
அதன்படி டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மத்தியபிரதேச வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆந்திர அணி திணறியது. முடிவில் அந்த அணி 54.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரசாந்த் குமார் 29 ரன்களும், கரண் ஷர்மா 23 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ரிக்கி புய் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மத்தியபிரதேச அணி தரப்பில் ஈஸ்வர் பாண்டே 4 விக்கெட்டுகளும், கௌரவ் யாதவ், குமார் கார்த்திகேயா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு ஆந்திரா அணி தக்க பதிலடி கொடுத்தது. ஆந்திராவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க இயலாமல் மத்திய பிரதேசம் 35.5 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் நமன் ஓஜா 30 ரன்கள் எடுத்தார். ஆந்திர அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ‘கிரீனாத் ரெட்டி’ 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 41 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆந்திர அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடினமான இந்த பிட்சில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ‘கரண் ஷிண்டே’ அபார சதத்தில் ஆந்திர அணி இரண்டாவது இன்னிங்சில் 301 ரன்கள் குவித்தது. ஷிண்டே 103 ரன்கள் சேர்த்தார். மத்திய பிரதேச அணியில் ஈஸ்வர் பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 343 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க விக்கெட்டை இழந்த மத்திய பிரதேச அணி பின்னர் 35/3 என்ற நிலையில் இருந்தது. அதன் பின்னர் மத்திய பிரதேச அணி வீரர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத அந்த நிகழ்வு நடந்தது. வரிசையாக அந்த அணியின் வீரர்கள் டக் அவுட்டாக, 35/3 என்ற நிலையில் இருந்த அந்த அணி இறுதியில் 16.5 ஓவர்களில் அதே 35 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி தந்தது.
காயம் காரணமாக களமிறங்காத கவுரவ் யாதவ் விக்கெட்டையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அந்த அணியின் 6 வீரர்கள் டக் அவுட் ஆகினர். ஆந்திரா அணி தரப்பில் சசிகாந்த் 6 விக்கெட்டுகளை அள்ளினார். விஜயகுமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முடிவில் ஆந்திரா அணி 307 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்த ஆந்திர வீரர் ‘கரண் ஷிண்டே’ ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.