உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்காக பணியாற்றுமாறு வந்த அழைப்பை முன்னாள் இலங்கை பேட்ஸ்மேன் மஹேல்லா ஜெயவர்த்தனே நிரகாரித்துள்ளார். இதற்கு காரணம் லெஜன்டரி பேட்ஸ்மேன் ஜெயவர்த்தனேவிற்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையிலான கடந்த கால மோதல்கள். இலங்கை பேட்ஸ்மேன் ஜெயவர்த்தனே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை இளம் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஜெயவர்த்தனே-வின் இந்த வேண்டுகோளை இலங்கை கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. கடந்த வருடத்தில் இலங்கை கிரிக்கெட் கமிட்டியில் இடம்பெற்றிருந்த ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா, ஆர்விந்த் தி செல்வா ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட் தொடரை அதிகம் மேம்படுத்த வேண்டும் என்ற தங்களது வேண்டுகோளை விடுத்தனர். ஆனால் அந்த வேண்டுகோளையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்காமல் நிராகரித்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தனக்கு தற்போது அளித்த வேண்டுகோளை ஜெயவர்த்தனே நிராகரித்துள்ளார். இதற்கு காரணம் அணியின் முழு கட்டமைப்பில் தனது பங்களிப்பு இல்லாததே காரணம் என தெரிவித்துள்ளார். அணி நிர்வாகத்தில் தனது சிறிய பங்களிப்பு இருப்பை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன், ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் எந்த தொடர்பும் தனக்கு வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
"சன்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு ஜெயவர்த்தனே கூறியதாவது,
" எனக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால் எனக்கு தற்போது அதிக வேலைப் பளு உள்ளது. அனைத்தையும் விட, நான் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக என்ன செய்ய முடியும் என எனக்கு தெரியவில்லை. நான் ஓய்வு பெற்று விட்டதால் என்னை விளையாடவும் அனுமதிக்க மாட்டார்கள்."
"இலங்கை அணியில் என்னுடைய பங்களிப்பை அளிக்க அங்கு எந்த இடமும் இல்லை. தற்போதைய இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. உலகக் கோப்பை இலங்கை அணிக்கான வீரர்கள் தேர்வு என அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டது. நான் அங்கு புதிதாக சென்று எந்தவித பங்களிப்பையும் இலங்கை அணிக்காக அளிக்க முடியாது."
"இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் என்னுடைய சிறிய பங்களிப்பு தற்போது வரை இருப்பதை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்காக எந்த பங்களிப்பும் என்னால் அளிக்க முடியாது. இதனை நான் எனக்குள் பலமுறை கூறிக்கொள்வேன். ஏற்கனவே மற்றவர்கள் தேர்வு செய்து கட்டமைத்த அணிக்கு நான் பயிற்சி அளிப்பது சரியாக இருக்காது. இந்த இடம் எனக்கு தகுந்ததாக இருக்காது என நினைக்கிறேன்"
இலங்கை பேட்ஸ்மேன் ஜெயவர்த்தனே சமீபத்தில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு, அந்த அணியை சேம்பியன் பட்டத்தை தட்டிச் செல்ல உதவியாக இருந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான ஜெயவர்த்தனே 2015 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பேட்டிங் லெஜன்ட் ஜெயவர்த்தனே 149 சர்வதேச டெஸ்ட் போட்டிகள், 448 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 44 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000 மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் இக்கட்டான காலகட்டத்தில் அந்த அணியின் கேப்டனாகவும் ஜெயவர்த்தனே இருந்துள்ளார். இவர் தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் கிரிக்கெட் பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார்.