கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் திருவிழா களை கட்டத் தொடங்கி இருக்கிறது. கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முன்னணி வீரர்களின் காயம் சில அணிகளுக்கு பெருத்த பின்னடைவையும், தீராத தலைவலியும் கொடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சாம்பியன் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘லுங்கி நெகிடி’யை காயத்தால் இந்த தொடரில் இழந்து விட்டது. மேலும் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி மற்றும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்டிரிச் நோர்டிச் ஆகியோர் காயத்தால் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பட்டியலில் ‘மும்பை இந்தியன்ஸ்’ அணியும் தற்போது இடம் பிடித்துள்ளது. அந்த அணியின் அனுபவம் வாய்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இலங்கையின் லசித் மலிங்கா தற்போது இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக முதல் 6 ஆட்டங்களில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விரைவில் உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடர் தொடங்க உள்ளது. உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க இலங்கை வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். எனவே முன்னணி வீரர்கள் அனைவரும் கட்டாயம் இந்த உள்ளூர் ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே லசித் மலிங்காவால் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக முதல் 6 ஆட்டங்களில் விளையாட முடியாது என தெரியவந்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வரும் லசித் மலிங்கா அளித்துள்ள பேட்டியில், “நான் காயம் மற்றும் உடற்தகுதி பிரச்சனைக்காக இந்த ஐபிஎல் ஆரம்பகட்ட போட்டிகளில் இருந்து விலகவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக நான் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ‘தடையில்லா சான்றிதழ்’ கேட்டு விண்ணப்பித்து இருந்தேன்.
ஆனால் விரைவில் தொடங்க உள்ள உலகக்கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு தற்போது நடைபெற உள்ள உள்ளூர் ஒருநாள் போட்டி தொடரில் அனைத்து வீரர்களும் கட்டாயமாக பங்கேற்க வேண்டுமென கூறினர். எனவே நான் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்தேன்.
இதன் மூலம் எனக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் அதில் பெரிதாக எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நாட்டுக்காக விளையாடுவதே முக்கியமானதாகும். மும்பை இந்தியன்ஸ் அணியில் தரமான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளனர். எனவே இது அவர்களை பெரிதாக பாதிக்காது என நம்புகிறேன்”. இவ்வாறு மலிங்கா கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை மலிங்கா 110 போட்டிகளில் பங்கேற்று 154 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மும்பை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த வருடம் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணியை நாளை எதிர்கொள்கிறது. மலிங்கா இல்லாததின் தாக்கம் மும்பை அணியை பாதிக்குமா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும்.