நடந்தது என்ன?
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தசை பிடிப்பின் காரணமாக பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் இவரது சக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூடிய விரைவில் இங்கிலாந்து செல்வார் என அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆஸ்திரேலிய அணியின் ஒரு போட்டிகளில் ஒரு வழக்கமான வீரராக களமிறங்குகிறார். 2019 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் பங்கேற்றுள்ளார். ஸ்டாய்னிஸ் உலகக் கோப்பை தொடரில் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பாகிஸ்தானிற்கு எதிராக ஜீன் 12 அன்று நடைபெற உள்ள நான்காவது போட்டியில் தசை பிடிப்பு காரணமாக விலகியுள்ளார்.
கதைக்கரு
ஆஸ்திரேலிய அணிக்காக 36 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸிற்கு இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. 36 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள மார்கஸ் ஸ்டாய்னிஸ் 36.37 சராசரியுடன் 982 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும். அத்துடன் தனது வலதுகை வேகப்பந்து வீச்சில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த புள்ளி விவரங்கள் மூலம் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். எதிர்பாராத விதமாக பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் தசை பிடிப்பு காரணமாக ஸ்டாய்னிஸ் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷை ஆஸ்திரேலிய அணியில் இணைத்துள்ளது.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் போலவே மிட்செல் மார்ஷும் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இவர் 2015ல் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸை விட மிட்செல் மார்ஷ் அதிக அனுபவத்தை தன் வசம் வைத்துள்ளார். சமீப உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் மிட்செல் மார்ஷின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் தற்போது இடம்பிடித்துள்ளார்.
மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 53 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 35.7 சராசரி மற்றும் 93.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1428 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும். அத்துடன் தனது வலதுகை வேகப்பந்து வீச்சில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக 2018 ஜனவரி 18 அன்று கடைசியாக இங்கிலாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதன்பின் தற்போது நேரடியாக உலகக் கோப்பை அணியில் இவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது என்ன?
தசைப்பிடிப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதரணமாக ஏற்படுவதுதான். மார்கஸ் ஸ்டாய்னிஸ் தனது உடற் தகுதியில் அதிக கவனம் செலுத்துவார். ஏனெனில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக இவர் வலம் வருகிறார்.